குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது! – யாழ்.ஊடக அமையம்

318 0

உலக ஊடக சுதந்திரதினம் இன்று(03) சர்வதேசம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் இவ்வருடமும் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து நீதி கிடைக்காத சூழலில் ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகிறது.

ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்கள் மீதான படுகொலைகள், காணாமல் போகச்செய்தல்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

அது வரை இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது என்பது யாழ்.ஊடக அமையத்தின் தெளிவான அபிப்பிராயமாகும் என யாழ்.ஊடக அமையம் இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குற்றவாளிகள் தண்டிக்கப்படாது சுதந்திரமான இச்சூழலில் நடமாடும் வரை ஊடகவியலாளர்கள் தம்மை சுயதணிக்கைக்கு உட்படுத்திக் கொள்ளும் துர்ப்பாக்கிய சூழல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

கடந்த அரசுகளின் ஆட்சியின் கீழ் இலங்கை முழுவதும் 44 சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

அதில் பெரும்பான்மையாக வட-கிழக்கில் மட்டும் சுமார் 41 தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

இவர்களுள் தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் குறித்த அடிப்படை நீதி விசாரணைகள் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட ஆரம்பிக்கப்படாதமை இந்த அரசின் பொறுப்புக் கூறலை கேள்விக்குட்படுத்துகிறது.

புதிய அரசின் ஆட்சியின் கீழ் ஊடகவியலாளர்கள் மீதான பகிரங்க படுகொலைகள் எவையும் இடம்பெறவில்லை. அதே போன்று பகிரங்கமாக ஊடகவியலாளர்கள் எவரும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படவில்லை.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் கடத்திக் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள கேலிச்சித்திர கலைஞரும் பத்திரிகை எழுத்தாளருமான பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இவை வரவேற்புக்குரியவையே. எனினும் இவற்றை மட்டும் உலகுக்குக் காண்பித்து இந்த நாட்டில் இடம்பெற்ற ஏனைய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் பொறுப்புக் கூறாது இந்த அரசு நழுவ முடியாது.

இதற்கான பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிக்கொள்ள அரசுக்கு இடமளிக்க முடியாது என்பதே இலங்கையில் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் நிலைப்பாடாகும்.

இச்சூழலில் ஊடக சுதந்திர தினமான இன்று படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களை யாழ்.ஊடக அமையம் நினைவு கூருகின்றது.

அத்துடன் எந்த அழுத்தங்களும் இன்றி தகவல்களை திரட்டவும் அவற்றை அறிக்கையிடவும் உள்ள உரிமையை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் யாழ்.ஊடக அமையம் வலியுறுத்துகிறது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை யாழ்.ஊடக அமையம் அழுத்தமாக கோரிக்கை விடுக்கிறது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.