கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2015க்கு பின்னர் கடந்த நவம்பர் மாதம் வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டதாகவே கூறப்படுகிறது.
மேலும், நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டு அதிக தொகையையும் ட்ரூடோ அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. ஆட்சியின் இறுதி கட்டத்தில் இருக்கும் லிபரல் அரசாங்கம் அகதிகள் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், குடியேற்றக் கொள்கைகளில் கடினமாகி வருகிறது என்பதை கனேடிய மக்களுக்கு காட்ட முயல்வதாகவே கூறப்படுகிறது.
மேலும், 2020 முதல் நாடு கடத்தப்படுபவர்கள் எண்ணிக்கையும் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாகவே கனடாவின் எல்லைப் பாதுகாப்பு முகமைகள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட முறையில் வெளியேறியவர்களை தவிர்த்து 2024ல் ஜனவரி 1 முதல் நவம்பர் 19 வரையில் கனேடிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,300 என கூறப்படுகிறது.
இது 2023ல் வெளியேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 8.4 சதவிகித அதிகரிப்பு என்றும் 2022ல் நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 95 சதவிகித எண்ணிக்கை அதிகரிப்பு என்றும் தெரிய வந்துள்ளது.
அகதி நிலை
எதிர்வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றவும் கனடா திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக மட்டும் ட்ரூடோ அரசாங்கம் 30.5 மில்லியன் கனேடிய டொலர் தொகையை ஒதுக்கியுள்ளது.
2023 மற்றும் 2024ல் மட்டும் கனடா எல்லை சேவை முகமையானது வெளியேற்றும் நடவடிக்கைகளுக்காக 65.8 மில்லியன் கனேடிய டொலர்களை செலவிட்டுள்ளது.
இந்த நிலையில், ட்ரம்பின் மிரட்டலுக்கு பயந்து சுமார் 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை எல்லை பாதுகாப்புக்கு எனவும் ட்ரூடோ அரசாங்கம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.