பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர், தான் பெற்ற பச்சிளங்குழந்தையை, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணியளவில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து, யாரோ ஒரு குழந்தையை வீசி எறிய, ஹொட்டல் ஊழியர்கள் ஓடோடிச் சென்று அந்தக் குழந்தையை தூக்கி எடுத்துள்ளனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத அழகான அந்த ஆண் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது.
கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள, ஒரு பெண் அந்தக் குழந்தையை ஹொட்டலின் இரண்டாவது மாடியிலுள்ள ஒரு அறையின் ஜன்னல் வழியாக வீசி எறிந்தது தெரியவந்தது.
மேலும், அமெரிக்காவின் Oregon மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் மியா (Mia McQuillin, 18) என தற்போது தெரியவந்துள்ளது.
மாணவியான மியா, ஒரு குழுவுடன் ஐரோப்பா சுற்றுலா புறப்பட்டுள்ளார். அவ்வகையில் பிரான்ஸ் வந்தபோது இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
அவர், தான் தங்கியிருந்த ஹொட்டல் அறையில், தானே குழந்தையைப் பெற்று, ஒரு டவலில் சுற்றி ஜன்னல் வழியாக வீசியுள்ளார் மியா.
பொலிசார் மியாவைக் கைது செய்து காவலில் வைத்துள்ளார்கள்.
அவர் ஏன் அப்படிச் செய்தார், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்குத் தெரியாதா, அவருக்கு குழந்தைகள் பிடிக்காதா என பல கோணங்களில் அதிகாரிகள் மியாவிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பெற்ற குழந்தையை, இளம்பெண் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய அந்த பயங்கர விடயம் பாரீஸில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.