அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் செவ்வாய்கிழமை (25) கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே ரஜீவ் அமரசூரிய மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஜவகர்லால் நேருவினால் 1951 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கருத்து, அடிக்கடி திருத்தங்களுக்கு உட்படுத்தப்படக்கூடாத அரசியலமைப்பின் மேன்மைத்தன்மையைக் காண்பிக்கின்றது. இருப்பினும் இலங்கையின் அரசியலமைப்பானது கடந்த இரு தசாப்தகாலத்தில் 17 ஆவது திருத்தம் முதம் 21 ஆவது திருத்தம் வரை பல திருத்தங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. இத்திருத்தங்கள் அவை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அரசியல் மற்றும் சமூக ரீதியான வல்லாதிக்கம் அரசியலமைப்பின் நேர்மைத்தன்மையையும், அரசியலமைப்புவாத கோட்பாட்டையும் புறந்தள்ளியிருப்பதைப் பிரதிபலிக்கின்றன.
அரசியலமைப்புவாத கோட்பாடானது ஜனநாயகம், ஆட்சியியல் நிர்வாகம், அதிகாரப்பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. அரசியலமைப்பானது அரச இயங்குகையை வடிவமைக்கும் அடிப்படை சட்டக்கட்டமைப்பாகக் காணப்படுகின்றது. நாட்டின் சட்ட, அரசியல் மற்றும் சமூகக்கட்டமைப்பை வழிநடத்தும் மீயுயர் சட்டமாக அரசியலமைப்பு விளங்குகின்றது. அரசியலமைப்பு என்பது சகலரையும் உள்ளடக்கிய, பரந்துபட்ட சட்டக்கட்டமைப்பைக் கொண்டிருக்கவேண்டும்.
இலங்கையின் அரசியலமைப்பு வரலாறானது ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதும், வலுவிழக்கச்செய்வதுமென மாறி மாறி ஏற்ற இறக்கங்களைக் கொண்டமைந்திருக்கின்றது. அரசியலமைப்பும், ஆட்சியியல் கட்டமைப்புக்களும் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி கூட்டிணைந்து இயங்கவேண்டியது அவசியமாகும். இருப்பினும் இலங்கை இன்னமும் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முழுமையான இயலுமையை அடைந்துகொள்ளவேண்டியிருக்கின்றது.
அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.