விசாரணைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறவில்லை

42 0

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது. எனவே எவரும் அச்சப்படத்தேவையில்லை.

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதேபோன்று தற்போது இடம்பெறும் விசாரணைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (26) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி– தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்களை அடிப்படையாக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதல்லவா?

பதில்-நாம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவில்லை.எதிர்காலத்திலும் அது இடம்பெறாது.விசாரணை நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. பொலிஸ் மா அதிபர், பொலிஸார் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனவே தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அதன் தொடர்புடைய தரப்பினர் அழைக்கப்படுகிறார்கள். இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.இது தொடர்ச்சியாக இடம்பெறும்.அரசியல் நோக்கத்தை கொண்ட அந்த பழைய அரசியல் முறைமை இங்கு இருக்காது.அது நாமல் ராஜபக்ஷவோ அல்லது வேறு ஒருவராக கூட இருக்கலாம். பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றுவர்.

கேள்வி -பாதாள குழுக்களை உருவாக்கியது அரசியல்வாதிகள் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இந்த விடயங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை அல்லவா?

பதில் -அண்மைய நாட்களாக பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன.இவை ஒரே தடவையில்

எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகிறது.இதன் பின்னணியில் ஏதேனும் குழுக்களின் தலையீடு உள்ளதா என ஆராய்ந்து வருகிறோம்.இது தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவை ஈடுபடுத்தியுள்ளோம்.

எமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.நாம் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது.அதனை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பார்களாயின் அது தொடர்பில் நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.