கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வரை சென்றடைந்தது.
கூட்டு எதிர்க் கட்சியின் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையின் இரண்டாவது நாளான இன்று காலை 10.30 மணியளவில் உதுவன்கந்த பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இருந்து ஆரம்பமாகியது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் மதவழிபாடுகளின் பின்னர் கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.
கொட்டும் மழைக்கு மத்தியில் சிங்கள பாரம்பரிய நடனம் மற்றும் மயிலாட்டம் என கலைக்கட்டிய கூட்டு எதிர்க் கட்சியின் இரண்டாம் நாள் பாதயாத்திரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும,கெஹலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ஷ ,உதய கம்மன்பில,பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அழுத்கமகே, அமுனுகம, கீதா குமாரசிங்க, குமார வெல்கம,சீ .பி .ரத்நாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ,பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட கூட்டுஎதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
நல்லாட்சியே வெளியேறு, ஆட்சியை கொடு,நாட்டை பாதாளத்தில் தள்ளாதே என பல்வேறு கோஷங்களுடன் உதுவனகந்த பகுதியில் இருந்து கேகாலை நகரை நோக்கி பிரதான வீதியை ஆக்கிரமித்து பாதயாத்திரை முன்னேறியது.இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கேகாலை நகரை அண்மித்த பாதயாத்திரைக்கு ஆதரவாளர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.
பாதயாத்திரையில் நடையாகவும் வாகனத்தில் ஏறியும் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ பாதையின் இருமருங்கிலும் இருந்த மக்களுக்கு கைகளை அசைத்த வண்ணம் கலந்துக்கொண்டார். கேகாலை நகர் முழுவதுமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தநிலையில் மெதுவாக இரண்டாம் நாளுக்கான இறுதி இருப்பிடமான நெலுந்தெனிய நோக்கி பாதயாத்திரை மாலை 6.10 மணியளவில் சென்றடைந்தது.
வாகனநெரிசலும் தன்சலும்கேகாலை நகரில் பொலிசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக மாற்று வழிகளில் வாகனங்களை திருப்பி அனுப்பினர்.பாடசாலைவிடும் நேரம் என்பதால் முழு அளவில் சனநெருக்கடியில் கேகாலை நகர் நிறைந்தது. அதேபோன்று பாதயாத்திரையில் கலந்துக் கொண்டவர்களுக்கு தன்சல் வழங்கப்பட்டது. கடலை மற்றும் பாணங்கள் வழங்கப்பட்டமை இன்றைய நாளில் முக்கியமானதாக அமைந்தது.