தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு கோப் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21) கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடியான செயற்பாடுகள் பல வெளிப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக கோப் உபகுழுவொன்றை நியமிக்க குழுவின் தலைவர் தீர்மானித்தார்.
இதற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ன, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரைக் கொண்டதாக கோப் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த உபகுழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்காக இந்தக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட தினத்தில் பி.ப 2 மணி முதல் பி.ப 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இந்தக் காசோலையை உறுதிப்படுத்தித் தருமாறு முன்னாள் தலைவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய முன்னாள் தலைவர் அழுத்தத்தைப் பிரயோகித்திருப்பது தெளிவாகப் புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சரியான நடைமுறையைப் பின்பற்றாது இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டமை இங்கு தெரியவந்ததுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருடைய தேவைக்காக இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாவதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், விநியோகஸ்தர்களை இணைத்துக்கொண்டமை குறித்து குழு வினவியதுடன், இதற்குப் பதிலளித்த முன்னாள் தலைவர் தனக்கு ஏராளமான கடிதங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆற்றுப்படுத்தியதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்த செயல்முறை ஒழுங்கற்றமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.