சீனாவின் தேசிய இனவிவகார அமைச்சருடன் அநுர மாகாண சபை முறைமையை மையப்படுத்திப் பேச வேண்டும்!

24 0

இந்தோ-சீன இணைவின் மூலமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஆசியப் பிராந்திய முறைமையை கண்டறிய முடியும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்தார்.

சீனாவின் தேசிய இன விவகார ஆணையகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பான் யூ தலைமையிலான குழுவினரின் வருகை மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றை உருவாக்குவதில் இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கியது, இதன் தான் 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், கொழும்புக்கு வரும் சீனாவின் உயர்மட்டக்குழுவினர் இலங்கைக்கு முப்பது ஆண்டுகாலப் போருக்கான காரணங்களில் ஒன்றாகவுள்ள இனப்பிரச்சினையைத் தீர்க்க உதவ முடியும் என்று கருதுகின்றேன். சீனக் குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, சிறுபான்மையினரின் பாதுகாப்பு, இன நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தலைப்புகளில் செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான அமைச்சர் பான், சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாள்வதையே முக்கிய பணியாகக் கொண்டுள்ளார். அத்துடன் சுற்றுச்சூழல் ஆர்வலரான அமைச்சர் பான் யூ, ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் காலத்தில் ஒரு சிந்தனை மிகு தலைவராக வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார்.

உயர்மட்ட சீனக்குழுவினரின் தற்போதைய வருகை இனப்பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. கொண்டிருக்கின்ற குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதற்கு வாய்ப்புக்களை கொண்டிருக்கின்றது. இனப் பிராந்திய சுயாட்சி என்பது இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பதில் ஜே.வி.பி. உறுதியாக இல்லை. வளர்ச்சியின்மையின் பகிரப்பட்ட சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர, அரசியல்-பிராந்திய பரிமாணத்துடன் ஒரு தனித்துவமான இனச் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனைகள் இருக்கின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆகவே, சீனக்குழுவினரின் வருகையின் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜே.வி.பி. சிறந்த செவிசாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அதிகம் என்று நான் கருதுகின்றேன். ஏனென்றால் உலகளாவிய ரீதியில் இடதுசாரிகளின் வெற்றிகரமான அனுபவங்களுக்கு எதிர்மறையாக ஜே.வி.பி எப்போதும் அதன் சொந்த விசித்திரமான விதிவிலக்கான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

உதாரணமாக, தேசிய இன விவகார ஆணையகத்திற்குத் தலைமை தாங்கும் அமைச்சர் பான் யூ, சீன கம்னியூச கட்சியில் முக்கியமான ஐக்கிய முன்னணி பணி ஆணையகத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். ஜே.வி.பியோ அல்லது அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியோ 'ஐக்கிய முன்னணிகளில் நம்பிக்கை கொள்ளவில்லை, 1965 இல் ஜே.வி.பி ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் ஆரம்பகாலத்திருந்தே ஒருபோதும் ஐக்கிய முன்னணிகளில் நுழைந்ததில்லை, தேர்தல் அல்லது அரசியல் தந்திரோபாய கூட்டணிகளை மட்மே கையாண்டது.

ஜே.வி.பி.யின் இந்த விசித்திரமான விதிவிலக்கு நேரடியாக தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்பு பட்டதாக உள்ளது. நியாயமற்ற முறையில் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி.யின் இரகசிய அமர்வுகளில் (1984-1985) ஒப்புதல் அளிக்கப்பட்ட ரோஹண விஜேவீரவின் 350 பக்க மகத்தான படைப்பான தமிழ் ஈழப் போராட்டத்திற்கு என்ன தீர்வு', எனும் தலைப்பிலான நூலில் மாவட்ட மேம்பாட்டு சபைகள் உட்பட அனைத்து வகையான பிராந்திய சுயாட்சிகளையும் முறையாக பட்டியலிடுகிறார். அவர் அவற்றில் ஒவ்வொன்றையும் கண்டித்ததோடு மட்டுமன்றி அரசியல்-பிராந்திய சுயாட்சிக்கு இடமளித்திருக்கவில்லை.

அதேநேரம், சுயாட்சிக்கான முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சிiயும் தமிழ் தேசிய அரசியல் தரப்பினர் கோருகின்ற அதேநேரம், சிங்கள பெரும்பான்மை அரசியவாதிகள் ஒற்றையாட்சி முறைமையை கைவிடுவதற்கு தயாராக இல்லை. ஆகவே. இந்தியாவால் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எதிர்ப்பதைப் போலவே சீனாவின் இன சுயாட்சி' மாதிரியையும் எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் இந்த எதிர்ப்பினை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இந்தியாவின் (அரை- கூட்டாட்சி) மற்றும் சீனாவின் (ஒற்றையாட்சி அல்லது சுயாட்சி) மாதிரிகள் வேறுபட்டிருந்தாலும், இந்தியாவின் 13ஆவது திருத்தம் மற்றும் சீனாவின் இனப் பிராந்திய சுயாட்சி ஆகியவைமுற்றிலும் இணக்கமானவை மற்றும் அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்க்கலாம். ஆகவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வருகை தந்துள்ள சீன அமைச்சரிடம், இலங்கையின் மாகாண சபை அமைப்பு குறித்த நிபுணர் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும், பொருத்தமான நெறிப்படுத்தல் மற்றும் மேம்பாட்டை பரிந்துரைக்கவும் வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அவரது அரசு, இந்தோ-சீன இணைவின் மூலமாக இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஒரு உண்மையான ஆசிய மாதிரியைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தக்கொள்ள முடியும் என்றார்.