இன்று (3) உலக ஊடக சுதந்திர தினம் உலகெங்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது.”மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று ஊடக சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆபிரிக்க ஊடகங்களினால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “ஊடக சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
இது ஊடக சுகந்திர தினம் தோன்றியதன் வரலாற்று பின்னணியாகும் . இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக ஊடக சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.
இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களின் எல்லைகளற்ற அமைப்பானது 180 நாடுகளை, அந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரத்துக்கேற்ப பட்டியலிட்டுள்ளது. இதன்படி உலகில் ஊடக சுதந்திரமுள்ள நாடாக முதலாது இடத்தில் பின்லாந்து உள்ளது. ஊடக சுதந்திரம் மிகக் குறைந்த நாடாக அல்லது ஊடக அச்சுறுத்தல் அதிகமுள்ள நாடாக எரித்ரியா உள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 141ஆவது இடத்தில் இருக்கிறது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 2017 பிப்ரவரி மாதம் 3ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் தகவல் அறியும் உரிமையின் ஊடாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உடமைகள் மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதும், அது தோல்வியடைந்துள்ளதாக, இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரிபால சிறிசேனா அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
ஊடக சுகந்திரத்திற்காக உலகில் மரணித்த ஊடகவியலாளர்கள் அனைவரையும் நினைவில் நிறுத்தும் இவ் வேளை ஈழத்தீவில் கொல்லப்பட்ட , காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி நிற்கின்றோம்.