கலைகலாசார பாரம்பரியங்களுடன் இசைப்பாரம்பரியமும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து நிற்கின்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த வளர்ந்த கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளினால் கலைகலாசாரங்கள் மட்டுமன்ற இசைப்பாரம்பரியமும் மறைந்துசெல்லும் நிலை இருந்துவருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் அதிகமாகவாழும் கிராமப்புறங்களில் வாழ்வினோடு இரண்டறக்கலந்திருந்த இசைப்பாரம்பரியம் இன்றுள்ள சந்ததிகள்அறியமுடியாத நிலையே இருந்துவருகின்றது.இந்த நிலையில் கிராமிய பாடல்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் பணியை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மக்கள் இசை விழா நேற்று வியாழக்கிழமை வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈச்சந்தீவில் நடைபெற்றது.ஈச்சந்தீவு ஸ்ரீகண்ணகி அம்மன்ஆலய முன்றிலில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின்போது பல்வேறு கிராமங்களில் உள்ள நாட்டார் பாடகர்கள் அழைத்துவரப்பட்டு கிராமிய பாடல்கள் இசைக்கப்பட்டன.கிராம மக்களின் அன்றாட வாழ்வில் பிண்ணிப்பிணைந்துள்ள அருகி வரும் பாடல்கள் இங்கு பாடப்பட்டன.