ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான பான் யூ, சீனாவின் சிறுபான்மை விவகாரங்களைக் கையாளுவதுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.
குறிப்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சீன தரப்பு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளது.
இதேவேளை கண்டியில் தலதா மாளிகைக்கு செல்லவுள்ள சீன குழுவினர், யாழ்ப்பாணத்திற்கும் அமைச்சர் பான் யூ தலைமையிலான குழு செல்ல தீர்மானித்துள்ளது.
அண்மைக் காலமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சீனாவின் ஆதரவு திட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு, மூன்று தசாப்த கால உள்நாட்டு போருக்கு காரணமான தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.