பெரியாரை விமர்சித்தபோது வராத கோபம் பிரசாந்த் கிஷோரை விமர்சித்தால் வருவது ஏன்?

23 0

சீமானுக்கு நிகராக நாதக-வினரால் கொண்டாடப்படுபவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். அந்தளவுக்கு தனது அதிரடிப் பேச்சுகளால் அனைவரையும் ஈர்த்து வரும் சாட்டை துரைமுருகன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து…

ஈரோடு இடைத்தேர்தலில் நாதக நினைத்ததை சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

100 விழுக்காடு நினைத்ததை சாதித்தோம் என்று சொல்ல முடியாது. நாதக-வின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது. ஈரோடு ஈவெராவின் மண் என்று சொன்னார்கள். அந்த ஈவெராவே மண் தான் என்று நாங்கள் செய்த பிரச்சாரத்திற்கு மக்கள் செவி சாய்த்து உள்ளார்கள்.

பெரியாரை விமர்சித்ததால்தான், ஈரோடு கிழக்கில் கட்டுத் தொகையை காவு கொடுக்க வேண்டிய நிலை நாதக-வுக்கு ஏற்பட்டுள்ளது என திமுக-வினர் கூறுகின்றனரே..?

ஈரோட்டில் ஈவெராவுக்கு என்று வாக்குகள் கிடையாது. ஈவெரா பெயரைச் சொல்லி வாக்கு கேட்ட திருமுருகன் காந்தியின் வேட்பாளர் 221 வாக்குகள் தான் வாங்கி உள்ளார். ஈவெராவை விமர்சனம் செய்யாத 2023 தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகள் பெற்று கட்டுத்தொகையை இழந்தோம். தற்போது அவரை விமர்சனம் செய்ததால், இரு மடங்குக்கும் மேலாக 24 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். சாதி ஒழிப்பு, பெண்ணியம் போன்ற அனைத்து விஷயங்களிலும் ஈவெராவின் இரட்டை நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சென்றதற்கு கிடைத்த வெற்றி இது.

பாஜக-வினர் நாதக வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்று சொல்லப்படுவது குறித்து..?

எங்கள் கொள்கை வேறு. பாஜக கொள்கை வேறு. நாங்கள் தமிழ் தேசியம் பேசுகிறோம் அவர்கள் இந்திய தேசியம் பேசுகிறார்கள். நாங்கள் ராவணனை கடவுள் என்கிறோம் அவர்கள் ராமனை கடவுள் என்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கில் 12 ஆயிரம் வாக்குகள் தான் பாஜக பெற்றுள்ளது. அப்படி இருக்க, பாஜக வாக்குகள் எங்களுக்கு வந்தது என்பது அப்பட்டமான பொய். அவர்கள் தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும் அல்லது நோட்டாவுக்கு வாக்களித்திருக்க வேண்டும். ஒருவேளை, திமுக இந்தியில் வாக்குச் சேகரித்ததால், பாஜக-வினர் அவர்களுக்குக் கூட வாக்களித்திருக்கலாம்.

பெரியாரை விமர்சித்துதான் நாதக-வை வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறதா?

தனிமனித வெறுப்போடு இந்த விமர்சனத்தை நாதக வைக்கவில்லை. எண்ணிலடங்கா தமிழின தலைவர்களின் வரலாற்றை மறைத்து, தமிழர்கள் படிக்க, சுயமரியாதையோடு நடக்க ஈவெரா தான் காரணம் என்கிறார்கள். ஈவெரா பிறப்பதற்கு முன்பே பட்டப்படிப்பு படித்த தமிழர்கள் இருக்கின்றனர். திருக்குறள், சங்க இலக்கியம், 63 பெண்பாற் புலவர்கள் என தமிழ்மொழியின் சிறப்புகள் ஏராளம். அவற்றையெல்லாம் மறைத்து தொடர்ச்சியாக எங்களை ஏமாற்றும் திராவிட அமைப்பின் ஆணிவேராக, பிம்பமாக உள்ள ஈவெராவை நொறுக்க வேண்டிய தேவை நாதக-வுக்கு ஏற்பட்டது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியை பார்ப்பான் என சாதி குறியீட்டுக்குள் அடைத்த திராவிடத்தின் மீதான அறச்சிற்றத்தை வெளிப்படுத்தவே ஈவெரா எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது.

சீமானின் தம்பியாக இருந்த தவெக தலைவர் விஜய், பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றதால் எதிரியாகி விட்டாரா?

ஈவெரா கொள்கைத் தலைவர் என்று அறிவித்தால் அவரின் கொள்கைகளில் எது தனக்கு பிடித்தது என விஜய் அறிவிக்க வேண்டும். வீட்டுக்கு ஒரு கொள்கை, வெளியில் ஒரு கொள்கை வைத்திருப்பது திராவிடம். ஈவெராவின் சாதி ஒழிப்பு, சமூக நீதி எல்லாமே பொய். இதுவரைக்கும் ஈவெரா பெயரைச் சொல்லி திராவிடம் ஏமாற்றியது. இப்போது, ஈவெராவை விஜய் தூக்கி பிடிக்கும் போது. இளையதலைமுறை ஏமாறுவதைத் தடுக்க அவரை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம்.

பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட மூன்று வியூக வகுப்பாளர்கள் விஜய் கட்சிக்காக களத்துக்கு வந்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பணக் கொழுப்பு இருப்பவன், மூளையை பணம் கொடுத்து வாங்குவான் என்று சீமான் சொன்னதுதான் இதற்கு பதில். காமராஜரோ, அண்ணாவோ, கலைஞரோ, ஜெயலலிதாவோ வியூக வகுப்பாளர்களை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. நல்ல ஆளுமைகளின் அறிவுரைகளைப் பெற்று, அவர்கள் மக்களை நம்பி நின்றார்கள். ஆனால் இங்கு, கட்சித் தலைவரின் உடை அலங்காரம், சிகை அலங்காரம் மட்டுமின்றி… எந்த சாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதையும் பிஹாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோர் தீர்மானிப்பார். பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா சொல்வதைத்தான் விஜய் பேசுவார் என்றால். அவர்களையே கட்சியின் தலைவராக அறிவித்து விடலாமே. கொள்கை தலைவர் என்று குறிப்பிட்ட பெரியாரை நாதக விமர்சனம் செய்தபோது வராத கோபம். பிரசாந்த் கிஷோரை அமர்த்தியதை விமர்சித்ததும் தவெக-வுக்கு வருகிறதே. அப்படி என்றால் தவெக-வின் கொள்கைத் தலைவர் ஈவெராவா பிரசாந்த் கிஷோரா?

தனித்துப் போட்டி என்ற முடிவில் நாதக-விடம் மாற்றம் வருமா?

மக்கள் விரோத கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்த பின்பு, வெள்ளைத் தாளாக இருக்கும் தவெக-வுடன் கூட்டணி வைக்கலாம் என நாங்கள் யோசித்தோம். ஆனால், தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று விஜய் பேசியதால், அவரோடு கூட்டணி வைக்க முடியாத சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அதேசமயம், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஏற்று யார் வந்தாலும் அரவணைக்க தயாராக உள்ளோம்.

தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பிறகு தான் சீமான் செயல்பாட்டில் மாற்றம் வந்துள்ளது. அவர் பாஜக-வின் மிரட்டலுக்கு பயந்துவிட்டார் என்ற கருத்து பற்றி..?

அரசியலில் நாங்கள் எவ்வளவு தூய்மையானவர்கள் நேர்மையானவர்கள் என்பதைக் எடுத்துக்காட்ட தேசிய புலனாய்வு முகமையின் சோதனை உதவியது. நாங்கள் தவறானவர்களாக, வெளிநாட்டு நிதியை கோடிக்கணக்கில் பெறுபவர்களாக இருந்திருந்தால். என்ஐஏ விட்டு வைத்திருக்குமா? என்ஐஏ சோதனைக்கு வந்தவர்கள், மிகவும் கண்ணியமாக, மரியாதையாக எங்களை நடத்தினார்கள். தமிழ்நாடு காவல்துறையைப் போல் எனது தொலைபேசியை பிடுங்கி, அதில் உள்ள ஆடியோவை வெட்டி, ஒட்டி, திமுக ஐடி விங்கிடம் கொடுக்கும் அநாகரிகமான அரசியலை அவர்கள் செய்யவில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை வெளிப்படுத்த இந்த சோதனை உதவியது. எனவே. நாங்கள் யாரைக் கண்டு பயப்படவும் இல்லை. யாரும் எங்களை மிரட்டவும் முடியாது.

திருச்சி டிஐஜி-யான வருண்குமாருக்கும் நாதக-வுக்கும் இடையே அப்படி என்னதான் வன்மம்..?

வன்மம் என்பதை தாண்டி திமுகவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், நாதக-வை விமர்சித்தால், திமுக உயர் பதவி கொடுக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். திமுக சொல்லியும் அவர் இது போன்று செயல்படலாம். நாதக குறித்து தமிழகத்தில் எந்த ஐபிஎஸ் அதிகாரியும் இப்படி பேசியதில்லை. அவரின் செயல்பாடு அவரது பணி விதிமுறைகளுக்கு மாறானது. அவரது குடும்பத்தினர் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சியினர் யாராவது அப்படி அவதூறு செய்தால் அவர் உடனடியாக நீக்கப்படுவார்.

இலங்கை பயணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களில் சீமான் பொய் சொல்கிறார் என்ற குற்றச்சாட்டு பல தரப்பில் இருந்தும் எழுகிறதே?

பொதுவாக வாதத்தில் தோற்கிறவன், அவதூறைக் கையில் எடுப்பான். தலைவர் பிரபாகரனுடன் சீமான் படம் எடுத்தார் என்பதற்காகவா 36 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இதற்கு முன்பு படம் எடுத்த வைகோ, திருமாவளவன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் பின்னால் ஏன் மக்கள் திரளவில்லை? தலைவருடன் சீமான் படம் எடுத்தார் என்பதற்காக மட்டுமல்ல… அவர் எடுத்து வைக்கிற அரசியல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும், தலைவர் படத்தை ஒட்டுகிற அளவுக்கு அவரைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

நாதக -விலிருந்து தொடர்ச்சியாக பொறுப்பாளர்கள் விலகிக் கொண்டிருக்கிறார்களே?

நாதக – வில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். இதில் வேலை செய்யாதவர்களை வெளியேற்றி, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் திமுக, தவாக போன்ற கட்சிகளுக்கு போகின்றனர். இதை கணக்குக் காட்டி நாதக கூண்டோடு காலி என்கின்றனர். பிறகு எப்படி ஈரோட்டில் 24 வாக்குகளை பெற்றோம்?

சாட்டை துரைமுருகன் பிடியில் தான் சிஎன் இருக்கிறார் என்று கட்சியில் இருந்து வெளியெறுபவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக இதுதான் இருக்கும். சீமானை யாரும் இயக்க முடியாது. அவர்தான் எங்களை இயக்குகிறார். சீமானுடன் நான் தொடர்ச்சியாக பயணிப்பதால், அவர் உடன் இருப்பதால் இதுபோன்ற விமர்சனம் வருகிறது. நான் சீமானுக்கு 100 விழுக்காடு உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் என் மீது விமர்சனங்கள் வருகின்றன.

சீமானை தலைவராக ஏற்று வந்தவர்களை அரவணைக்காமல், “நீ இருந்தால் இரு.. இல்லாவிட்டால் வெளியேறு” என்று சொல்வது சர்வாதிகாரம் இல்லையா?

“என்னுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கேட்டுக் கொண்டு, இருந்தால் கட்சியில் இரு . இல்லாவிட்டால் வெளியில் போ” என்று தான் சீமான் சொல்கிறார். எந்தக் கட்சியாக இருந்தாலும், அக்கட்சியின் கொள்கையை ஏற்காதவர்கள் அதில் தொடர முடியாது. அதோடு, நாதக-வில் சீமான் என்னைப் போல் பலப் பல ஆளுமைகளை உருவாக்கியுள்ளார். சீமான் சர்வாதிகாரி அல்ல. பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்.

நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சீமான் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் மாற்றுக் கட்சிக்கு போகிறார் என்றும் செய்திகள் வருகிறதே?

காளியம்மாள் நாதக-வில் தான் தொடர்கிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. அவர் தொடர்ந்து களத்தில் செயல்படுவார். அவர் வேறு கட்சிக்கு செல்கிறார் என்று சொல்வதெல்லாம் உளவுத்துறையும், சமூக வலைதளங்களில் இருக்கக்கூடிய திராவிட கூலிகளும் பரப்பும் பொய்த் தகவல்கள்.