சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம், அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு சாதகமான பதிலை அளித்துள்ள சர்வதேச நாணய நிதியம் நாளை திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ள அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவு திட்டத்தின் பின்னர் ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் நாளை 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இந்த வரவு – செலவு திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த வரவு – செலவு திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும். எவ்வாறாயினும் இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.
2024 ஆம் ஆண்டின் நான்காவது – மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.
எனினும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.