மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்: அமைச்சரவைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

238 0

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்-அமைச்சர் அலுவலக செயலாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்ட அரங்கத்தில் இருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் மாலை போட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 11.05 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

ஜூலை 1-ந் தேதி மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான திட்டம் அமலுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் இந்தத் திட்டம் அமலாக்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டபோது, மத்திய அரசைக் குறித்து யாரும் விமர்சனம் செய்யவேண்டாம் என்று அமைச்சர்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் நிதித்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத் துறை, வீட்டுவசதித் துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஐகோர்ட்டு விசாரணையில் இருக்கும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பதிவு செய்யும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் நில விற்பனை தொடர்பான வழிகாட்டி மதிப்பீடு உள்பட நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டன. பல்வேறு அரசுத்திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

பிற்பகல் சுமார் ஒரு மணிவரை அமைச்சரவைக் கூட்டம் நீடித்தது. எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றபிறகு, அவர் தலைமையில் நடந்த 2-வது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

கடந்த மார்ச் 3-ந் தேதி முதல்-அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு நேற்று அமைச்சரவைக் கூட்டம் மீண்டும் கூடியது.