மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கின் எதிரியை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மல்லாகம் இராணுவ முகாமில் பணியாற்றிய குமாரதாசகே சமீர பிரசாத் குமார என்ற இராணு வீரரைக் கொலை செய்ததாக, குறித்தவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இரத்தினம் ஆனந்தராஜா என்பவருக்கு எதிராக குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணையின்போது, வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சிகளாக மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர்கள் சாட்சியமளித்தனர்.அரச தரப்பு சாட்சியங்களையடுத்து, இந்த வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரத்தினம் ஆனந்தராஜா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் இரண்டு தரப்பு சாட்சியங்களையும் செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன், இந்த வழக்கில் எதிரி மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அறிவித்து அவரை விடுதலை செய்தார்.இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீதான, ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு விசாரணைகள், திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கடந்த 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
இது தொடர்பான வழக்கு இதுவரை காலமும் திருகோணமலையில் இடம்பெற்றுவந்தது.இதனை தற்போது சட்டமா அதிபர் யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளார்இந்தநிலையில் வழக்கு தொடர்பான பதிவேடுகள் கிடைத்ததும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.