எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின் உயர் அதிகாரியே காரணம்

45 0

எமது ஆட்சிக் காலத்தில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

பிலியந்தல பகுதியில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்ற ஆசன அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மின் விநியோக துண்டிப்பு தற்போதைய பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப் போவதில்லை. மின்சார சபையின் பொறியியலாளர்களே பொறுப்புக் கூற வேண்டும்

ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களையும் மின்சார சபையே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. எமது அரசாங்கத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டபோது அவ்விடயம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் என்ற ரீதியில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்தேன்.

விசாரணைகளில் மின்சார சபையின் உயர் அதிகாரியின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாகவே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

மின்சார சபையின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மின்சார சபைக்குள் அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பான தொழிற்சங்கத்தினர் எப்போதும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்படுவார்கள் என்றார்.