பிரித்தானியர்கள் இலங்கைக்கு பிரவேசித்திருக்காவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனிப்பிரிவாகவே இருந்திருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.2000 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கென்று தனிக் கலாசாரம், மத நம்பிக்கை என்ற தனித்துவங்கள் உள்ளன.பிரித்தானியர்களின் வருகையின் பின்னரே வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டது.அவ்வாறில்லாத பட்சத்தில், வடக்கு தனிப்பிரிவாகவே இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், சிங்கள மக்கள் அதிகளவில் இருக்கிறார்கள் என்பதற்காக, தமிழ் மக்கள் சிறுபான்மையினர் என்று சிறுமைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை.
தமிழ் மக்களின் தனித்துவத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.அதுவே சிறந்த மறுசீரமைப்பாகவும் அமையும் என்று அவர் கூறியுள்ளார்.இதேவேளை, வடமாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணைகள் தொடர்பிலும் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.குறிப்பாக வடக்கில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு தொடர்பான பிரேரணை என்பவை, நல்லிணக்கத்துக்கு முரணாக நிறைவேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை மறுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் நிறைவேற்றிய பிரேரணைகள் அனைத்தும் உண்மையில் இடம்பெற்றவிடயங்கள் அடிப்படையானவையே என்று கூறியுள்ளார்.