அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை)
பிறப்பிடம்:- சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்-தமிழீழம்
வதிவிடம்:- பூர்ஸ்ரட், யேர்மனி (Bürstadt, Germany)
தமிழீழதேசத்தின் மீதும், தாய்மொழியின் மீதும், தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் ஆழ்மன நேசிப்பும், அளவுகடந்த பற்ருறுதியும் மிக்க ஒரு சீரிய பண்பாளராகத் திகழ்ந்து, தமிழ்த்தேசிய இனத்தினது விடுதலைச் செல்நெறியில் உண்மைக் காவலர்களாகவும், ஏக பிரதிநிதிகளாகவும் திகழ்ந்து, போர்ப்பரணி எழுதிய வரலாற்று நாயகர்களை தன் இதயப்பரப்பெங்கிலும் தாங்கிச் சுமந்தவருமான, திரு.வேலுப்பிள்ளை சிவநாதன் ஐயா அவர்கள் சாவை அணைத்துக்கொண்ட செய்தியறிந்து பெருந்துயர் கொள்கின்றோம்.
தமிழீழதேசத்தின் விடுதலைக்காக, மகோன்னதமான கொடையாகத் தான் பெற்ற இரு பிள்ளைச் செல்வங்களை மாவீரர்களாக உவந்தளித்த மாண்புமிகு ஐயா அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற வரலாற்றுப் பேரியக்கத்திலே, சுய விருப்போடும், அர்ப்பணிப்போடும் அதி முக்கியத்துவம் கருதிய துறையொன்றிலே சேவையாளராக இணைந்து பேரன்போடு பணியாற்றினார்.பின்னாளில் அதே விடுதலைப் பாதையிலே தானுமோர் முழுநேரப் போராளியாக மறைமலையெனும் புனைபெயரிலே குறிப்பிடத்தக்க காலப்பகுதியில் இயங்கியதைத் தோழமையாளர்கள் தமது நினைவுத் தளத்திலிருந்து பகிர்கின்றபோது, இவர்மீதான மரியாதை மேலும் வலுக்கொண்டு அவரைத் தேசத்தின் வணக்கத்திற்குரிய பீடத்திற்கு இட்டுச் சென்று, வரலாறு நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதிலே ஐயமில்லாது, இந்நேர மரியாதைமிகு வணக்கத்தைப் பகிர்கின்றோம்.
தமிழ்த்தேசிய இனம்மீது சிறிலங்காப் பேரினவாத அரசு காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்துவிடும் வன்கொடுமைகளின் நீட்சியிலே, அதி உச்சப் போர்க்களமாக வியாபித்து நின்ற முள்ளிவாய்க்கால்வரை இவரது பணிகள் நீண்டபோது, அக்காலப்பகுதியிலே தன் பாசமிகு மண இணையாளையும் இழந்து, அதன் வலிகளையும் தாங்கிச் சுமந்தபடி, பிள்ளைகளின் உதவியோடு யேர்மனிய தேசமதிலே தனது இறுதிக் காலங்களைச் செலவிட்டுள்ளார்.
இயற்கை தனது கரத்தை விரித்து அணைத்துக்கொண்ட இந்த மகத்தான மனிதரின் பேச்சும், மூச்சும் அமைதி கொண்டாலும், அவர் ஆற்றிய காலப்பணிகளையும், விதைத்துச் செல்லும் சிறந்த சமூக விடயங்களையும் வரலாறு தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும். இவரது ஆன்மா அமைதிபெற இயற்கையை வேண்டுவதோடு, பிரிவின் துயர் சுமந்து வாழும் உறவுகளோடு நாமும் துயரினைப் பகிர்ந்து, தேற்றுதலளிக்கின்றோம்.
‘மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது’
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.