பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பதிவு செய்யாமல் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் கட்டளைச் சட்டத்துக்கு அமைய அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முறைப்பாடளிப்பதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் தரப்பினரின் முறைப்பாடுகள் உரிய முறையில்
பதிவு செய்யப்படாமல் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அவை நிராகரிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர்
தமக்கு முறைப்பாடளிப்பதாக தெரிவித்துள்ள பதில் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையங்களில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை பதிவு செய்து அவற்றை விசாரணை செய்வது பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமை மற்றும் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையங்களில் அளிக்கப்படும் எந்தவொரு முறைப்பாட்டையும் பதிவு செய்யாமல் நிராகரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது எனத்தெரிவித்துள்ள அவர், இனி வரும் காலங்களில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய செயற்படாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.