தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி: திருமாவளவன்

222 0

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் சூழல் என்பது மிகவும் அச்சப்படக்கூடிய நிலையில் உள்ளது. மதவாத சக்திகளிடம் இருந்தும், சாதியவாத சக்திகளிடம் இருந்தும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக பா.ஜனதா கட்சி தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் இங்கு காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது.

ஒரு கட்சி வளர்ச்சி அடைய வேண்டும் என்று விரும்புவதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. பா.ஜனதாவுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால் தமிழ்நாடு என்பது மதவாதத்துக்கும், சாதிய வாதத்துக்கும் இடம் கொடுக்காமல் அரசியல் தளத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக சமூக நீதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மாநிலம். அதற்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் மதவாதத்தை முறியடிக்க முன்வர வேண்டும்.

வருகிற 4-ந்தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது.

விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற அவதூறுகளை பரப்புவது அரசியல் நாகரீகம் அல்ல. தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் பேசி முடிவு செய்யப்படும்.

டி.டி.வி. தினகரன் கைது ஆனதை, பா.ஜனதாவின் அரசியல் சதித்திட்டங்களில் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க தயாராக இருந்தார் என்று கூறும் புலனாய்வு பிரிவினர், அதனை வாங்க யார் தயாராக இருந்தார்கள்? யாருக்கு கொடுக்க திட்டமிட்டு இருந்தார்கள்? என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அதனை விரைவில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தற்போதைய தேர்தல் முறைகள்தான் இந்தியாவின் ஊழல் முறைகேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ளது. எனவே தேர்தல் நடைமுறைகளில் வலுவான மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.