இந்தோனேசியாவில், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியர் உள்ளிட்ட 10 பேரின் உயிர் ஊசலாட்டத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதில் இந்தோனேசியா விடாப்பிடியாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ ஜூடோடோ இதில் சமரசம் செய்து கொள்வதே இல்லை.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த குர்தீப் சிங் (வயது 48), 300 கிராம் ஹெராயின் போதைப்பொருளை இந்தோனேசியாவுக்குள் கடத்த முயன்றதாக 2004-ம் ஆண்டு, ஆகஸ்டு 29-ந்தேதி, அங்குள்ள சோகர்ணோ ஹட்டா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
2005-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தபோது, குர்தீப் சிங்கின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று பாகிஸ்தானை சேர்ந்த ஜூல்பிகர் அலி, நைஜீரியாவை சேர்ந்த 8 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் என மேலும் 13 பேருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. குர்தீப் சிங்குடன் சேர்த்து அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனையை நிறைவேற்ற அந்த நாட்டு அரசு முடிவு எடுத்தது.இந்த முடிவுக்கு ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தியர் குர்தீப் சிங்கின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் உருக்கமுடன் வேண்டிக்கொண்டனர். மத்திய அரசும் ஜகர்தாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.குர்தீப் சிங்கை காப்பாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக ஜவா தீவில் உள்ள நுசகம்பங்கன் தீவு சிறைக்கு நேற்று இரவு 14 கைதிகளும் கொண்டு செல்லப்பட்டனர், அவர்களை சுட்டுக்கொன்று தண்டனை நிறைவேற்றிய பின்னர் உடல்களை எடுத்து வருவதற்காக 14 சவப்பெட்டிகளுடன், ஆம்புலன்சுகளும் போய்ச் சேர்ந்து தயார் நிலையில் வைக்கப்பட்டன.நேற்று நள்ளிரவில் மேற்படி கைதிகளில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
துப்பாகியால் சுடும் சிறப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், உயிர்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. எனினும், தீய எண்ணங்கள் மற்றும் தீமைகளை ஏற்படுத்தக் கூடிய போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கவே இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.
நைஜீரியா நாட்டை சேர்ந்த மூன்று பேர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியரான குர்தீப் சிங் மற்றும் இதர ஒன்பது பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது.
இவர்களின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. எனினும், மேற்படி நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது நுசகம்பங்கன் தீவில் பயங்கரமான சூறைக்காற்று வீசியதாகவும் அதனால் மீதி பத்து பேரின் உயிர் தப்பியதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. குர்தீப் சிங் கொல்லப்படவில்லை, அவர் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று காலை தனது டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.