திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதி விபத்து

394 0

201607290933189974_Car-collision-with-lorry-4-dead-near-Dindigul_SECVPFதிண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதியதில் பாதிரியார் உள்பட 4 பேர் பலியானார்கள்.  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் புனித சலேத் அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 150-வது ஆண்டு திருவிழா ஆகஸ்டு 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக நாளை மறுநாள் (31-ந் தேதி) கொடியேற்றம் நடைபெறுகிறது.திருவிழாவுக்கு பட்டாசு ஆர்டர் கொடுப்பதற்காக பொலிரோ காரில் சிவகாசிக்கு ஆலயத்தின் உதவி பங்கு தந்தை அருளப்பன் உள்பட 4 பேர் சென்றனர்.ஆர்டர் கொடுத்த 4 பேரும் அங்கிருந்து இன்று அதிகாலை கொடைக்கானல் திரும்பி கொண்டிருந்தனர். காரை மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த மாற்கு என்பவர் ஓட்டினார்.

இந்த கார் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பாண்டியராஜபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. அருளப்பன் (வயது 30) சலேத் அன்னை ஆலய உதவி பங்கு தந்தை. இவரது சொந்த ஊர் நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல் பாளையம்.

2. சகாயராஜ் (45). முன்னாள் தி.மு.க. கவுன்சிலர், அந்தோணியார் புரம், மூஞ்சிக்கல், கொடைக்கானல்.

3. சேசுராஜ் (45) கீழ்பூமி, கொடைக்கானல்.

4. மைக்கேல்( 55). தந்தி மேடு, கொடைக்கானல்.

காரை ஓட்டிவந்த மாற்கு படுகாயத்துடன் விபத்தில் சிக்கினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. சுருளியாண்டி, அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) கருப்புசாமி ஆகியோர் விரைந்தனர். உயிருக்கு போராடிய மாற்கை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 4 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.