வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 7 சிறப்பு கவுண்ட்டர்கள்

397 0

201607290834545065_7-Special-counters-opened-to-file-income-tax-accounting_SECVPFவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும். இதையொட்டி, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் 7 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31-ந்தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2016-17-ம் மதிப்பீடு ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுதினத்துடன்(31-ந்தேதி) முடிவடைகிறது.

பொதுவாக வருமான வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் கடைசி நேரத்தில் கணக்கு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் வருமான வரி துறை அலுவலகங்களில் கடைசி நேரங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 7 சிறப்பு கவுண்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில், ஒரு கவுண்ட்டர் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வருமான வரித்தாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறப்பு கவுண்ட்டருக்கு 4 ஊழியர்கள் வீதம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

ரூ.250 கட்டணத்தில் ஆன்-லைன் மூலம் வருமான வரியை கணக்கு தாக்கல் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி செலுத்துதல், கணக்கு தாக்கல் செய்தல் போன்றவற்றில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சேவை மையமும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு-புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா சிறப்பு கவுண்ட்டர்களை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறை முதன்மை செயலாளர் வி.மகாலிங்கம் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கமிஷனர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா நிருபர்களிடம் கூறியதாவது:-நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு மக்கள் செலுத்தும் வருமான வரி வித்திடுகிறது. எனவே இதுவரையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத நபர்கள் 31-ந்தேதிக்குள் செலுத்தி விடுங்கள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக சிறப்பு கவுண்ட்டர்கள் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். அபராதம், நடவடிக்கையை தவிருங்கள்.

ஆன்-லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இந்த ஆண்டு சிறப்பு கவுண்ட்டர்கள் மூலம் கணக்கு தாக்கல் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என்று நான் கருதுகிறேன். கடந்த 2014-15-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் குறைந்த அளவு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2015-16-ம் ஆண்டு குறைந்த அளவு புகார்கள் வந்தாலும், அதிக அளவு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வரி ஏய்ப்பு தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற விவரங்களை கூற இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.ரூ.5 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள தனியார், மாநில-மத்திய அரசு சம்பளதாரர்கள் நேரிலோ அல்லது ‘ஆன்-லைன்’ மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். வருமான வரி துறை அலுவலகத்தில் உள்ள 23 நிரந்தர கவுண்ட்டர்களையும், 7 சிறப்பு கவுண்ட்டர்களையும் அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களிலும் கவுண்ட்டர்கள் இயங்கும். இன்று (நேற்று) முதல் 31-ந்தேதி (நாளை மறுதினம்) வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கவுண்டர்கள் செயல்படும் என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 34 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 7 சிறப்பு கவுண்ட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், சிறப்பு கவுண்ட்டர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.