முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர்- மாவை சேனாதிராஜா(காணொளி)

351 0

 

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது, குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா,

அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கும் கட்சியாகவும், தமிழர்களின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் கட்சியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தினைக் கொண்டுவருவதில் அவதானமாக செயற்பட்டவர்கள் எமது தமிழர்கள். அதனால்தான் இன்று மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது.

புதிய ஜனாதிபதி ஆட்சி அமைத்ததும் வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற நிலங்கள், உரியவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது இன்று படிப்படியாக நடைபெற்று வருகின்றது.

இன்று ஜனநாயக வழியில் தீர்வினைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கச்சிதமாகச் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

இதற்கான பலமாக இருப்பது தமிழ் மக்களாகிய உங்களது வாக்குப்பலமே. இந்த வாக்குப்பலத்தின் மூலமும் சர்வதேசத்தின் உதவியுடனும் எமக்கான தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

கடந்த போர்க்காலத்தில் வீழ்ச்சியடையாத கல்வி இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. எமது தமிழ்ப் பிரதேச மாணவர்கள் அனேகமானோர் கலைத்துறையினைத் தெரிவுசெய்வதனால் பாரிய வேலையில்லாப் பிரச்சினை உருவாகியுள்ளது.

எமது அழிந்துபோன பொருளாதாரத்தினைக் கட்யெழுப்ப வேண்டுமானால் கல்வியிலே முன்னேற வேண்டும். குறிப்பாக 65 வீதமானவர்கள் விஞ்ஞானம் ,பொறியியல்,தொழில்நுட்பத் துறைகளைத் தெரிவுசெய்ய வேண்டும்.

இவ்வாறு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் வழிகாட்டவேண்டும். போரின்போது இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்து உரிமையினை வென்றெடுக்கவேண்டும் என வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் மத்தியில் மது பாவனை அதிகரித்துள்ளது.

அதற்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ள நிலை அதிரிகரித்து வருகின்றது. இதில் இருந்து விடுபட வேண்டும். இளைஞர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் சமூகம் முன்னேற்றம் அடையும்- எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.