இலங்கையில் அரசியல் கட்சிகளின் மே தின கொண்டாட்டங்கள்

497 0

உலக தொழிலாளர் தினம் இன்று இலங்கையில் பல பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளால் தனித்தனியே கொண்டாப்பட்டன.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் கண்டி – கெட்டம்பே மைதானத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேதினக் கூட்டத்தின் போது ஏற்பட்ட மழை தொடர்பில் கருத்துரைத்தார்.

கண்டியில் நீண்ட நாட்களாக மழை பெய்யாதிருந்த நிலையில், மேதினக் கூட்டம் நடத்திய போது மழை பெய்தது.

அத்துடன் கடந்த ஆண்டு காலியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நடத்திய மேதினக் கூட்டத்தின் போதும் மழை பெய்தது.

அதேபோன்று அடுத்த ஆண்டும் மழை பெய்யாத நகர் ஒன்றை தெரிவு செய்து, அங்கு மேதினக் கூட்டத்தை நடத்தி மழை பெய்ய வைப்பதாக ஜனாதிபதி கூறினார்.

அதேநேரம், தொழிலாளர் தினத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றமை குறித்தும் அவர் இதன்போது விளக்கம் வழங்கினார்.

தொழிலாளர்களின் குரல்களுக்கு எப்போதும் செவிசாய்க்க வேண்டும் என்ற அடிப்படையில், தொழிலாளர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கு தொழிலாளர் தினம் முக்கியத்துவமாக அமைவதாக ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

மருதானை தொடருந்து நிலையத்துக்கு முன்னாள் ஆரம்பமான ஐக்கிய தேசிய கட்சியின் பேரணி, புஞ்சிபொரலை ஊடாக பொரலை சந்திக்கு சென்று, பேஸ்லைன் வீதி ஊடாக கெம்பல் மைதானத்தை சென்றடைந்தது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் மேதின நிகழ்வுக்கு, மக்கள் கூட்டம் அதிகம் பிரவேசித்திருப்பதாக கூறினார்.

இதனை பார்க்கும் போது, ஐக்கிய தேசிய கட்சி எந்த ஒரு தேர்தலுக்கும், எந்த ஒரு சவாலுக்கும் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேநேரம் மகிந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களுக்காக 2018ஆம் ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் அதேநேரம், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், அரச வருமானத்தை அதிகரிக்கவும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் தலவாக்கலையில் நடைபெற்றது.

கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர் பழனி திகாம்பரம், ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், அரவிந்த்குமார் மற்றும் திலக்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கினிகத்தேனையில் நடைபெற்றது.

இதன்போது நான்கு முக்கியத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி அரச பேருந்தோட்டக் காணிகளை தனியாருக்கு வழங்குவதை தடுத்தல், அரச பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை நிதியம் குறித்த பிரச்சினையை தீர்த்தல், பெருந்தோட்ட சேவையாளர்களுக்கான வீடமைப்பு காணிவழங்கல் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான மேதினக் கூட்டம் அம்பாறை – ஆலையடிவேம்பு – தர்மசங்கரி பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோருக்கான நீதிவழங்கல், காணி விடுவிப்பு, தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வு முன்வைப்பு, புதிய தேர்தல் முறையில் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம்களை தமிழர்களும் தமிழர்களை முஸ்லிம்களும் ஏமாற்றி கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

இரண்டு சமுகங்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.

அப்போது தீர்வுகளை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு முஸ்லிம் தலைமைகளின் பூரண ஓத்துழைப்பினையும் நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம் என்றும் சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜே வி பி தமது தொழிலாளர் தினத்தை முன்னிட்ட கூட்டம் கொழும்பு – பீ.ஆர்.சீ. மைதானத்தில் நடைபெற்றது.

அவர்களின் மேதின பேரணி தெஹிவளையில் ஆரம்பமானது.

இதற்கிடையில், உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இன்று முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் ஒப்பாரி போராட்டத்தை நடத்தினார்கள்.

தங்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கடந்த இரண்டு மாத காலமாக கேப்பாபுலவு மக்கள், அங்குள்ள படைமுகாமிற்கு முன்னாள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

படையினரால் விடுவிக்கப்படாதுள்ள காணிகளுள், தங்களது தொழில் புரியும் நிலங்களும் உள்ளன.

எனவே தங்களது தொழில் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தை நடத்தியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் போனோரின் உறவினர்கள் தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டித்தனர்.