பாலாற்றில் தடுப்பு அணை- தடை ஆணை பெற கருணாநிதி வலியுறுத்தல்

385 0

201607290829582612_palar-reservoir-TN-CM-Karunanidhi-urges-the-Supreme-Court-to_SECVPFஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பு அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசின் அனுமதி இல்லாமல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணைகளையோ, தடுப்பணைகளையோ கட்டக் கூடாது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டக் கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறையும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதை மீறி, சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில், புல்லூர் என்ற இடத்தில் தமிழக எல்லையில் ஐந்து அடி உயர தடுப்பணையை ஆந்திர மாநில அரசு கட்டிய போது, அதனைக் கடுமையாகக் கண்டித்து 2.7.2016 அன்றே நான் விரிவாக ஓர் அறிக்கை விடுத்தேன்.

ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வருக்கு இதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி விட்டு, உச்ச நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கல் செய்துவிட்டு, தன் கடமை அத்துடன் முடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்.

25.7.2016 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், பேரவை எதிர்க்கட்சித் தலைவர், மு.க. ஸ்டாலின் பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுவது பற்றிய பிரச்சினையை எழுப்பிப் பேசியிருக்கிறார். அப்போது அவர் பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசைக் கண்டித்து அவையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, விவாதிக்க வேண்டுமென்றும், ஆந்திர மாநில முதல்-மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகும் இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சிறிதும் அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போது, இன்று நாளேடுகளில், பாலாற்றுக்கு நீராதாரமாக விளங்கும் துணை ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டுமானப் பணியில் ஆந்திர மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது எனப் படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் பாலாறு பயணிக்கும் வனப் பகுதியில் கிடைக்கும் மழை நீர் மொத்தமும் புல்லூர் தடுப்பணைக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டுவிடும்.

இது தொடர்பாக பசுமைப் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், ஏ.சி. வெங்கடேசன் கூறும்போது, ‘ஆந்திர மாநிலத்தில் குப்பம் தொகுதியில் உள்ள வனப் பகுதியில் பெய்யும் மழை நீர் மொத்தமும் பாலாற்றுக்கு வந்து சேர்ந்தது. இதன் மூலம் தமிழகத்தில் ஓடும் பாலாற்றுக்குத் தடை இல்லாமல் நீர் கிடைத்தது. ஆனால் தற்போது ஆந்திர மாநில அரசின் நடவடிக்கைகளால், வனப் பகுதியில் கிடைக்கும் மொத்த மழை நீரும் இனிமேல் பாலாறு வழியாக ஆந்திராவைக் கடந்து தமிழகத்துக்கு வந்து சேர வாய்ப்பில்லை. எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும். ஆந்திர அரசின் கட்டுமானப் பணிகளுக்கு தடையாணை பெற வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போதுள்ள நிலையில் தமிழக அரசும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் துரிதமாகச் செயல்பட்டு, ஆந்திர அரசின் கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆந்திர அரசை எதிர்த்து வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. அந்த வழக்கில் உடனடியாகத் தடை ஆணை பெறாவிட்டால், ஆந்திர அரசு பாலாறு துணை ஆற்றில் தடுப்பணையையும் கட்டி முடித்து விடும் என்பதை உணரவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.