நாட்டில் மீண்டும் பாஸிசவாத மற்றும் இனவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டு வருகின்றது. அதற்கு ஆதரவானவர்களே காலி முகத்திடலில் ஒன்று கூடுகின்றனர். அதனால் நாட்டில் மீண்டும் ஜனநாயக விரோத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் இணைந்து நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் இன்று நடத்திய மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து சுறுகையில்,
இன்று நாட்டில் இருப்பது இரண்டு கூட்டங்களாகும். அவைதான் ஜனநாயக கூட்டமும் ஜனநாயக விரோத கூட்டமுமாகும். ஜனநாயக விரோத கூட்டம்தான் இன்று காலி முகத்திடலில் இடம்பெறுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மேதின கூட்டமாகும். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் மேற்கொண்ட பாஸிச வாத ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
அத்துடன் அரசாங்கம் ஊழல் மோசடி காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை மந்த கதியில் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , எக்னலி கொட போன்றவர்களின் கொலை மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் இன்னும் தீர்வொன்றை வழங்காமல் இருக்கின்றது.
மேலும் இந்த அரசாங்கத்தை அமைக்க இடதுசாரி கட்சிகள் முன்னின்று செயற்பட்டன. அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் புதிய அரசியலமைப்பு உறுவாக்குதல் விடயம் தொடர்பாக அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்