தொழிலாளர்களின் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது

274 0

தொழில் புரியும் மக்களின் வியர்வை மற்றும் உழைப்பின் மீதே முழு உலகமும் தங்கியுள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களது உழைப்புக்கு உரிய பெறுமானம் கிடைக்கும் சிறப்பான எதிர்காலமொன்றிற்காக உரையாடல் ரீதியான, இணக்கப்பாடு மிக்க பணியினை மேற்கொள்ள இம்முறை மே தினத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன.

மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாறு முழுவதும் தாம் தமது உரிமைகளுக்காக மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக உலகின் கவனத்தை தொழிலாளர் மீது ஈர்க்கும் வகையில் சர்வதேச ரீதியாக மே தினத்தைக் கொண்டாடுவது ஆரம்பாகியது.

தற்காலத்தில் உழைக்கும் மக்கள் என்பது மிகவும் பரந்த அர்த்தத்தினைக் கொண்டுள்ளது. அது தொடர்ந்தும் தொழிற்சாலையில், பண்ணையில் உழைப்பினை சிந்தும் ஓர் குழுவினருடன் மாத்திரம் வரையறுக்கப்படுவதில்லை.

நவீன தொழிநுட்ப உலகில் மனித ஊழியத்துக்கு பரந்தளவான பல சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதுடன் அதற்கமைவாக வேலை செய்யும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றன.

சம்பிரதாய மே தினக் கொண்டாட்டத்துடன் மாத்திரம் சுருங்கி விடாது இந்த நவீன போக்குகள் மற்றும் சவால்களை இனங்கண்டு வேலை செய்யும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களது நலன்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், விரிவான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் என்பன அத்தியவசியமானதாகும்.

நவீன தொழிநுட்ப உலகில் புதிய சமூக, அரசியல் சவால்களுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கக் கூடிய, தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தமது பணியை ஆற்றுவதற்குத் தேவையான பின்புலம் உருவாகின்ற, அவர்களது உழைப்புக்கு உரிய பெறுமானம் கிடைக்கும் சிறப்பான எதிர்காலமொன்றிற்காக உரையாடல் ரீதியான, இணக்கப்பாடு மிக்க பணியினை மேற்கொள்ள இம்முறை மே தினத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம்.