இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சிறீலங்காவில் நோயாளர் காவுவண்டிச் சேவை

445 0

ambulanceஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் செய்தியும் வாசிக்கப்பட்டது.அதில், நோயாளர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்காக ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த இலவச நோயாளர் காவுவண்டிச் சேவைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் 7.6 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

1990 எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்திற்கு 100நோயாளர் காவுவண்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.முதற்கட்டமாக, காலி, மாத்தறை, கொழும்பு, களுத்துறை, கம்பகா ஆகிய மாவட்டங்களில் இந்தச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நோயாளர் காவு வண்டிகள் தென்மாகாணத்திலேயே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதன்மூலம் 550பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1990 திட்டத்திற்காக 250பேர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டிருந்தனர்.மேலும் 250 பணியாளர்களுக்கும், 50 அழைப்பு நிலைய பணியாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்த சேவைக்கான கட்டுப்பாட்டு மையம் ராஜகிரியவில் அமைக்கப்படவுள்ளது.