முள்ளிக்குளம் பகுதி விடுவிப்பு முதற்கட்ட வெற்றி – சுவாமிநாதன்

288 0

மன்னார் முள்ளிக்குளம் பகுதி மீண்டும் அம்மக்களிடத்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணங்கியுள்ள நிலையில் அது தமது முயற்சிகளுக்கு கிடைத்த முதல்வெற்றியென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடரும் எனக் குறிப்பிட்டவர் சொற்ப காலத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியும் மீளத்திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுமெனவும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுடன் விரைவில் அடுத்த கட்ட விடயங்கள் குறித்து பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு தசாப்த காலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் முள்ளிக்குளம்  கிராமத்தின் பகுதியொன்றை விடுவிக்க கோரி அம்மக்கள் தொடர்ச்சியாக 38நாட்களாக போராட்டத்தினைத் முன்னெடுத்திருந்த நிலையில் அப்பகுதி நேற்று முன்தினம் மீண்டும் மக்களிடத்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் உள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் கேப்பாபுலவில் தொடரும் மக்கள் போராட்டம் குறித்தும் அமைச்சர் சுவாமிநாதனிடத்தில் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

வடக்கு கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அவர்களிடத்தில்  கையளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய நடவடிக்கைகளை நான் முன்னெடுத்திருந்தேன்.

கடந்த 24ஆம் திகதி பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகள், முப்படையினர் உள்ளிட்டவர்களுடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன்.

இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாகள் மன்னர் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினர் வைத்திருக்கும் பொதுமக்கள் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தனா.

அதற்கு அமைவாக அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்து அப்பிரதேச அருட்தந்தைமார், மக்கள் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள் ஆகியோரும் அவ்விடத்திற்குச் சென்று கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதாக இணங்கியிருந்தோம்.அவ் இணக்கப்பாட்டிற்கு அமைவாகவே நேற்று முன்தினம் அங்கு சென்று கலந்துரையாடி பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதியை விடுவிப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம்.

காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அதுதொடர்பாக நான் எடுத்த முயற்சிகளுக்கு அமைவாக முள்ளிக்குளம் விடயம் முதற்கட்டமாக வெற்றி கண்டிருக்கின்றது.

இதேபோன்று வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய பகுதிகளையம் விடுவிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக சொற்ப காலத்தில் காங்கேசன் துறை தொண்டமனாறு வீதி திறக்கப்படவுள்ளதோடு மயிலிட்டி சந்தி உள்ளிட்ட 289ஆம் இலக்க கிராம உத்தியோகஸ்தர் பகுதி உள்ளிட சில இடங்களும் மக்களிடத்தில் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் ஏனைய பகுதிகள் விடுவிப்பு குறித்தும் இராணுவத்தினருடன் அவர்களுக்குரிய மாற்று இடங்களை வழங்குவது குறித்து மீண்டுமொரு தடவை நான் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். இதன்போது விவசாயக் காணிகள் விடுவிப்பு குறித்தும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய மாற்றுவழிகள் குறித்தும் கவனம்செலுத்தவுள்ளேன் என்றார்.