சவுதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பேருந்துகள், கார்கள் நகர முடியாமல் வரிசைக் கட்டி நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜித்தா நகரத்திலும் பல பகுதிகளை வெள்ளம் சூழந்து இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவுதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 997 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கா, மதீனா, ஜித்தா நகரங்களுக்கு சவுதி வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சவுதி தலைநகர் ரியாத், அல்-பஹா, தபுக் உள்ளிட்ட நகரங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் முழுக்க கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மோசமான வானிலை காரணமாக ஜித்தா விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெக்காவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது