சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா கம்யூனிசம் மற்றம் திராவிடக் கொள்கைகள் குறித்து பேசியதாவது: ஸ்டாலின் காலத்தில் ரஷ்யா நீர்த்துப் போனது.
ஸ்டாலினுக்குப் பின்னர் குருசேவ், கோர்பசேவ் வந்தனர். பொதுவுடைமைத் தத்துவத்தால் அனைத்து மாகாணங்களையும், தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து பெரிய ரஷ்யாவை கட்டமைத்து, அதை வல்லரசாக உருவாக்கினார்கள். ஆனால், ரஷ்யா சிதறுண்டு போனதற்கு என்ன காரணம்? கோர்பசேவ் என்ற தலைவர் மோசமானவர். எனவே, தத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த தத்துவத்தைக் கையாளும் அடுத்த தலைமுறை தலைவர்கள் கெட்டவர்களாக இருந்தால், அந்த தத்துவம் தோற்றுப் போகும்.
தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறையக் குறைய தத்துவம் தோற்றுவிடும். கம்யூனிஸத்தில் கோளாறல்ல, அது செம்மையானது. ஆனால் அந்த தத்துவத்தை எடுத்துவந்த தலைவர்கள் நீர்த்துப்போன காரணத்தால், சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுவிட்டது.
ஆனால், திராவிடவியல் தத்துவத்தை பெரியார் தந்தார். அண்ணா அரியணையில் ஏற்றினார். அனைத்தையும் ஏற்றுக் கொண்டதால் இன்றும் அந்த தத்துவம் வாழ்கிறது. அதன் மூலம் கருணாநிதி அனைத்தையும் கொண்டு வந்தார்.
அண்ணாபோல ஸ்டாலின் பேசுவாரா என்று முன்பு கேட்டனர். இப்போது, ஸ்டாலின்போல உதயநிதி உழைத்தாரா என்று கேட்கின்றனர். எங்களது தாத்தா கடினமாக உழைத்தார், அதை எனது தந்தை பயிர் செய்தார். அந்த மகசூல் பத்திரமாக இருக்கிறது. அது திருடுபோகாமல் காக்கும் வேலையைச் செய்தாலே போதும். இனி ஒரு பெரியார் எங்களுக்கு வேண்டியதில்லை. அவரது தத்துவம் தோற்காமல் பாதுகாப்பதற்கான தலைவர் இருக்கிறார். எனவே, திராவிடம் தோற்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து: இந்நிலையில், நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, “தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பற்றி ஆ.ராசா தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்புடையதல்ல, தவறானவை. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்’’ என்றார்.
கம்யூனிஸ்ட் வெளியேற வேண்டும்: கம்யூனிஸ்ட் வெளியேற வேண்டும் : ஆ.ராசாவின் கருத்து பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, ‘‘கம்யூனிஸம் குறித்து ஆ.ராசா பேசியது தோழமை சுட்டுதல். திமுக செய்வதற்கெல்லாம் சாமரம் வீசி, கம்யூனிஸம் நீர்த்துப் போய்விட்டது.
மக்களுக்காகப் போராட வேண்டிய கட்சி, தற்போது வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. திமுக தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியை அவதூறு செய்கின்றனர். இதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? இதற்காக திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் வெளியேற வேண்டும்’’ என்றார்.