பொதுமக்கள் எச்.எம்.பி.வி. என்ற தொற்றுக் குறித்து வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை

14 0

பொதுமக்கள்  எச்எம்பிவி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்”   தொற்றுக் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சீனாவில் குறித்த வைரஸ் பரவல் அபாயகரமான நிலையில் இல்லை என அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் இதுவரை எச் எம் பி வி தொற்றாளர்கள் எவரேனும் இனங்காணபடவில்லை என சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் போதிக்க சமரசேகர குறிப்பிட்டார்.

இலங்கை மருத்துவ சங்கத்தில் செவ்வாய்கிழமை (07) சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமீபகாலமாக சீனாவில் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இன்புளுவென்சா,  மைக்கோபிளாஸ்மா நிமோனியா  போன்ற வைரஸ் தொற்றுக்களுடன், மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எச்எம்பிவி என்ற  மனித மெட்டாப்நியூமோ வைரஸ்”  என்ற வைரஸ் வகையும் பரவலாக பரவி வருவதை காணக் கூடியதாக உள்ளது.

எச்எம்பிவி என்பது புதிய வைரஸ் இனமல்ல. 2001 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் இவ்வகையான வைரஸ் இனம் முதலில் அடையாளம் காணப்பட்டது.

ஆகையால் பொதுமக்கள் இவ்வைரஸ் தொற்றுக் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சீனாவில் குறித்த வைரஸ் பரவல் அபாயகரமான நிலையில் இல்லை என அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இதுவரை எச்எம்பிவி தொற்றாளர்கள் எவரும் இனங்காணபடவில்லை. டிசம்பர் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை அதிக வைரஸ் தொற்று பரவும் காலப்பகுதியாக உள்ளது.

பண்டிகை காலத்தில் மக்கள் வெளியிடங்களில் அதிகம் நடமாடுவதால் இவ்வாறான வைரஸ் தொற்றுகள் பரவ வாய்ப்பாக உள்ளது.

விசேடமாக வயோதிபர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், சிறுநீரக நோயாளர்கள், எச் ஐ வி நோயாளர்கள் மற்றும் நாற்பட்ட சுவாச நோயாளர்களுக்கும் எச்எம்பிவி வைரஸ் தொற்று ஏற்படலாம்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கோவிட் -19 தொற்று காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகி மரணங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

நாட்டில் உள்ள சுகாதார வசதிகளை பயன்படுத்தி சுகாதார துறையினர் உள்ளிட்ட பலரும் நோய் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற ஏனை வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதுடன் நோய் தீவிரமடையும் போது மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

அத்துடன் தற்போது இலங்கையிலும் இன்புளுவென்சா வைரஸ் சடுதியாக பரவி வருகிறது. ஆகையால் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகி இருப்பின் முக கவசங்களை அணிவது நல்லது.

இதேவேளை வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிரஞ்சன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய மூன்று சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெங்களூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மேற்படி நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியக் கிடைத்துள்ளது.

நோய் தொற்றுக்கு ஆளாகியவர்களில் ஒருவர் நேற்று வைத்திய சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இன்றைய தினம் மேலும் ஒருவர் வீடு திரும்ப உள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

இந்தியாவில் வைரஸ் தொற்று அபாயகரமான நிலையில் இல்லை எனவும் அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எச் எம் பி வி வைரஸ் பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை பதிவாகவில்லை. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் 36 சதவீதமாக எச் எம் பி வி வைரஸ் தொற்று அதிகரித்திருந்தது.

மேலும் இவ்வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பி மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை  என்றார்.