வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

304 0
வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தெளிவான அறிக்கையை, நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளியிடும் வகையில் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் எனவும், அதனை ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து வடமாகாண முதலமைச்சர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குரல் எனும் அமைப்பை சார்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரநிதிகள் வடமாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரது தலமையில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து இன்றைதினம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இக் கலந்துரையாடல் குறித்து ஊடகங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இக் கலந்துரையாடல் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக 20ஆயிரம் பேர் வரையில் உள்ளார்கள். இவர்களில் இறுதிகட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 6ஆயிரம் பேர் வரையிலும் உள்ளார்கள். இந்நிலையில் இவர்களது காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பாக ஜக்கியநாடுகள் மனிதவுரிமை பேரவையிலே நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரத்தை ஆராய்ந்திருந்தோம்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி வடமாகாண முதலைம்ச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார். இக் கலந்துரையாடலில் முதலமைச்சர் ஜனாதிபதியிடம் காணாமல் போனோரது பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் திட்டவட்டமான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என கோரியுள்ளோம்.
மேலும் காணாமல் போனோரது பிரச்சனை தொடர்பில் தீர்வு காணப்பதற்கு சில மாதங்கள் கால தாமதம் ஏற்படும் என்பதால் அவர்களுக்கு சர்வதேச ரீதியான தற்காலிக அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்க்கமான பதில் வரும் வரை கனிசமான தொகை வழங்கப்பட வேண்டும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது புள்ளிவிபரங்களை வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் பிரநிதிகளுடன் இணைந்து மத்திய அரசாங்கமும், சர்வதேசமும் திரட்ட விசாரனைகளை முன்னெடுக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்ட பரணகம ஆணைக்குழிவின் அறிக்கைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தெளிவான அறிக்கையை, நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளியிடும் வகையில் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் எனவும், அதனை ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது வலியுறுத்த வேண்டும் முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளோம். இதற்கு முதலமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.