பயணிகளை தவிக்கவிட்ட சாரதி, நடத்துனருக்கு நேர்ந்த கதி!

16 0

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகன பரிசோதனையின் போது மொரட்டுவை பிரதேசத்தில் பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் சென்ற வீதி இலக்கம் 100 பாணந்துறை புறக்கோட்டை பேரூந்தின்  உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி ஜனவரி 15 ஆம் திகதி வரை சாரதி மற்றும் நடத்துனரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சாரதிக்கு 2,500 ரூபாவும் நடத்துனருக்கு 750 ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குறித்த இருவரும் வேறு பேருந்தில் பணிபுரிந்தால் குறித்த பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த இருவரையும் எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி பயிற்சி ஒன்றுக்கு அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், குறித்த பேருந்தின் வீதி அனுமதிப்பத்திரத்தை விசாரணைக்கு உட்பட்டு ஜனவரி 10ஆம் திகதி வரை இடைநிறுத்த மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.