12,000 கிலோ கிராம் கழிவு தேயிலை சிக்கியது

13 0

உடுநுவர, தவுலகல ஹந்தெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள தேயிலை களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு தகுதியற்ற 12000 கிலோ கிராம் தேயிலை தூள் அடங்கிய பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுமதியின்றி இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கழிவு தேயிலை தூள் 426 பொலித்தீன் பைகளில் இருந்துள்ளது.

கம்பளை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நளின் உதாரம்பவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த களஞ்சியசாலை சோதனை இடப்பட்டுள்ளது.

தவுலகல, வெலம்பொட, வடதெனிய ஹன்டெஸ்ஸ, லீமகஹகொடுவ,பூவலிகட உள்ளிட்ட உடுநுவர பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பல வருடங்களாக இந்த கழிவு தேயிலை வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் சிலோன் டீயின் பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவு தேயிலையை கொண்டுவந்து சீனி, தேன், சாம்பல், சுண்ணாம்பு என பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி கருப்பு தேயிலை தயாரித்து இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைக்கு விற்கின்றனர்

இந்த தேயிலை கையிருப்புடன் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்