அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்போம்

9 0

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோகிராம் சிவப்பு அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது சிவப்பரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்போம். அரிசி மாபியாக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிப்போம் என வர்த்தகம், வாணிபம் மற்றும்  உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் சந்தையில் சிவப்பு அரிசி இல்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  டி.வி. சானக குறிப்பிட்டார். இதன்போது அமைச்சருக்கும், டி.வி சானக்கவுக்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது. சதொச விற்பனை நிலையத்தில் அரிசி இருப்பதாக குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள சில்லறைக் கடைகளில் அரிசி இல்லை.  மக்கள் மத்தியில் சென்று பாருங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர். டி. வி சானக கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற  மத்திய ஆண்டுக்கான நிதி நிலைவரம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக  குறிப்பிட்டார்.

அவரது உரையை தொடர்ந்து உரையாற்றிய வர்த்தகம்,வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க,   சந்தையில் அரிசி தட்டுப்பாடு காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டு தான் உரிய தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க ஜனாதிபதித் தேர்தலின் போது   அதிக விலைக்கு சிவப்பு அரிசியை  கொள்வனவு செய்து 20 கிலோகிராம் என்ற அடிப்படையில் அரிசியை இலவசமாக  விநியோகித்தார்.இதனால் தான் தற்போது சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக,  சந்தையில் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை  தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே பிரச்சினை இல்லை, இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க,  சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காகவே  1 இலட்சத்து 6 ஆயிரம் கிலோகிராம் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு  சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக  விநியோகிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்களை  தொகைமதிப்பு திணைக்களம் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய டி.வி சானக,  அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டு விட்டோம் என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் நடைமுறையில் தீர்வில்லை.  கிராம புறங்களில் சதொச விற்பனை கிடையாது. சில்லறை கடைகளே உள்ளன. ஆகவே மக்கள் மத்தியில் சென்று பாருங்கள் என்று கடுமையாக சாடினார்.