ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை போதிருக்காராம விகாரையின் விகாராதிபதி பெல்பத்த தம்மராம தேரரின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடி இருந்தனர்.இந்நிலையில் இரு பிரதான அரசியல் கட்சியின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளமை தற்போதைய அரசியல் களத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணையுமா என எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டராவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.
கேள்வி ; முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளீர்களா?
பதில் ; இல்லை.அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடல்களும் இன்னும் இடம்பெறவில்லை என்றார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியிடம் அது தொபில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் எம்முடைய தாய் கட்சியாகும்.ஆனால் நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் போட்டியிட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளோம்.தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டோம்.ஐக்கிய தேசியக்கட்சி எம்முடையது.ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களே ஐக்கிய மக்கள் சக்தியிலும் உள்ளனர்.நாம் இரண்டு பிரிவினர் அல்ல.நாம் தற்போது செய்ய வேண்டியது எல்லாம் நெருங்கி பழகுவது மாத்திரம்.எதிர்காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.