பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்

9 0

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்னவென்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெற் வரி எவ்வாறு குறைக்கப்படும், அதனால் ஏற்படும்  வருவாய் இழப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07)  நடைபெற்ற  வருட ஆரம்ப நிதி நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு கடன்களில் 27 சதவீத கழிவு ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும்  தற்போதைய  நிலைக்கு அமைய  15 சதவீதமான கடன் கழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தேசிய கடன் மடறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதிய பயனாளர்கள் பாதிக்கப்பட்டார்கள்.  2.9 மில்லியன் நபர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை திருத்தும் வகையில் ஒரு திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தோம்.

இருப்பினம்  எவ்வித மாற்றமுமில்லாமல் அரசாங்கம்  சர்வதேச    நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையினால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் பொருளாதார பாதிப்புக்கான உண்மை காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளும் மறக்கடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகாலமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை. இந்த கேள்விக்கான பதிலை கோரிய போது அதனையும் தரவில்லை.

பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பது  பாராளுமன்ற சம்பிரதாயம் என்பதை புதிய உறுப்பினர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார விவகாரத்தில் எதிர்வரும் 15 ஆண்டுக்கான திட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

பொருளாதார மேம்பாடு  தொடர்பில் அரசாங்கத்திடம் உள்ள கொள்கை என்னவென்பதை இனியேனும் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் உணவு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள  வெற் வரியை நீக்குவதாக குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறு வெற் வரி நீக்கப்படும், அதனால் ஏற்படும்  வருவாய்  இழப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்.

சந்தையில் சிவப்பு அரிசிக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.  ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி  220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில் சந்தையில்  265 ரூபாவுக்கு  விற்பனை செய்யப்படுகிறது.

இதனை  பொய் என்று அரசாங்கத்தால் குறிப்பிட முடியுமா,  அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டம் ஏதும் கிடையாது என்பது வெளிப்பட்டுள்ளது என்றார்.