கார் சாரதியைத் தாக்கி பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளை ; அறுவர் கைது

14 0

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள வாடகை வாகன சேவை நிலையமொன்றுக்குச் சொந்தமான கார் ஒன்றை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவரை தாக்கி காயப்படுத்தி பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் ஆறு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த சனிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தம்புள்ளை நகரத்தில் உள்ள வாடகை வாகன சேவை நிலையமொன்றுக்குச் சொந்தமான கார் ஒன்றை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, இந்த சாரதி வெளிநாட்டுப் பிரஜையை காரில் ஏற்றிவிட்டு தம்புள்ளை நகரத்திற்குச் சென்ற போது சந்தேக நபர்கள் சிலர் காரை வழிமறித்து சாரதியை தாக்கி, வெளிநாட்டுப் பிரஜைகளை காரில் ஏற்ற கூடாது என கூறி மிரட்டி சாரதியிடமிருந்த 87 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரம் ஆகிய பொருட்களை  கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை நகரத்தைச் சேர்ந்த 41 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அறுவரும் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை நாளை புதன்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.