கிண்ணியா – குறிஞ்சாகேணி பாலத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி இனந் தெரியாதோரினால் உடைப்பு!

14 0
கிண்ணியா – குறிஞ்சாகேணி பாலத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளின் ஒரு பகுதி, உடைத்து ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை ( 06 ) அதிகாலை இனந் தெரியாதோரினால்,  கம்பி வேலிகள் உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம், காலாகாலமாக அரிப்புக்கு உள்ளாகி, அண்மைக்காலமாக இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக நிர்மாணித்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக கவன ஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இதன் காரணமாக, இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக 2021 ஆண்டு 226. 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2021.04.22 ஆம் திகதி பாலத்தின் மீள் கட்டுமான பணிகள் பணிகள் இடம் பெற்றிருந்தபோது, போக்குவரத்துக்காக தற்காலிகமாக படகு ஒன்று போடப்பட்டிருந்தது.

இந்தப் படகு 2021.11.21 திகதி விபத்துக்குள்ளானதில், ஐந்து சிறுவர்கள் உட்பட 8 பேர் பலியான துயரமான சம்பவம் ஒன்று,  இடம்பெற்றிருந்தது.

எனினும், இந்த பாலம் இன்னும் புனரமைப்பு செய்யப்படவில்லை.  இப்பாலத்தின் ஒரு பகுதியில் பயணிகளின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகள் மாத்திரம் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த கம்பிகளே இன்று இனம் தெரியாததோரினால் உடைத்து ஆற்றில் வீசப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இந்தப் பாலத்தின் ஊடாக ஆபத்தான கட்டத்தில் பயணம் செய்த நாங்கள், மேலும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற இந்த பாலத்தின் ஊடாக, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பயணம் செய்வது? பொறுமை இழந்த மக்கள், ஆத்திரமடைந்தே இதனைச் செய்திருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

மக்கள் எவ்வளவு காலத்துக்கு தான் பொறுமை காப்பது? புதிய அரசாங்கத்திலாவது இந்த பாலம் நிர்மாணிக்கப்படுமா? என்று மேலும் பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.