ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தாருங்கள்

30 0

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (06) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் தாய்மாரும், வென்னப்புவவைச் சேர்ந்த தாயொருவரும், குறித்த வலிந்து இணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ள கணவருக்காக முல்லைத்தீவைச் சேர்ந்த துணைவியார் ஒருவருமான ஐவர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப்போராட்டத்தில் சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான ஷெரீன் சரூர், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம், ராஜ்குமார் ரஜீவ்காந் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவின் பிரதான போராட்டத்துக்கான காரணத்தினைக் கேட்டறிந்ததோடு, ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளரான கமகேவுடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த பணிப்பாளருடன் சந்திப்பை நடத்தினார்கள். அச்சந்திப்பின்போது ஏலவே டிசம்பர் மாதம் 2ஆம் திகதி கையளிக்கப்பட்ட குறித்த விடயம் சம்பந்தமாக கடிதத்துக்கு உரிய பதில்கள் கிடைக்காமையின் காரணத்தினாலேயே போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அச்சமயத்தில் குறித்த விடயம் வெளிவிவகார அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோடு அந்த அமைச்சே விடயத்தினைக் கையாள்வதாகவும் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டதோடு அவ்விடயம் சம்பந்தமாக தாங்கள் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிகளை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த போராட்டத்தை நடத்தியவர்களில் வென்னப்புவவில் இருந்து வருகை தந்திருந்த தயாராரின் விடயமானது, அவருடைய புதல்வர் ஏலவே இராணுவத்தில் கடமையாற்றி பின்னர் வெளியேறியிருந்த நிலையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டதாக கூறப்பட்டதோடு அவர் தற்போது காணாமல்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.  இதனையடுத்து அவ்விடயத்தினை பிறிதாக கையாள்வதென பணிப்பாளரால் உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்றிருந்ததோடு அமைச்சின் சுற்றுவட்டத்தில் பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் வருகை தந்து போராட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்டறிந்ததோடு அவர்களை அமைச்சருடன் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களை அழைத்து சந்திப்பை நடத்தியதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.