முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

20 0

முச்சக்கர வண்டிகளில் பாகங்கள் பொருத்துவதற்கும் அலங்காரம் செய்வதற்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகைகளின் கீழ் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட, அத தெரண “பிக் ஃபோகஸ்” நிகழ்ச்சியில் இன்று இணைந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“முச்சக்கர வண்டியில் மாற்றம் செய்தால், அசல் மொடலில் எந்த மாற்றமும் செய்யாமல் வாகனத்தின் புத்தகத்தில் உள்ளிடப்பட வேண்டும். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று அரசாங்கத்திற்கு பணம் செலுத்தி மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலகுவாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஜூலை 7, 2023 முதல் முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை நிறுவுவதற்கும் அலங்கரிப்பதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இங்கு, முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக உபகரணங்கள் பொருத்துதல் மற்றும் அலங்காரம் செய்வதற்காக முச்சக்கரவண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, திணைக்களம் பல நிபந்தனைகளின் கீழ் இந்த அனுமதியை வழங்கியதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வாகனங்களின் பல்வேறு வகையான ஒலிப்பான்கள் பொருத்துதல்கள், பல்வேறு நிறங்களிலான வண்ண மின்விளக்குகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவதற்கு சாரதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.