மாநில செயலாளர் குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

16 0

“இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த நவம்பர் 25 ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரின் சம்மதமும் அவருடைய குடும்பத்தாரின் ஒப்புதலும் இல்லாமலேயே கருத்தடை சாதனமான காப்பர் டி-யைப் பொருத்தியுள்ளனர். சதைப் பகுதியோடு சேர்த்து பொருத்தியதால் அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது சம்பந்தமாக பெண்ணின் குடும்பத்தார்கள் மருத்துவமனையில் நடந்த முறைக்கேட்டினை புகாராக அளிக்க முன் வந்தனர். இதனை அறிந்து இந்து முன்னணி அமைப்பினுடைய மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் அந்தப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் நடந்த அவலம் பற்றியும், பெண்ணினுடைய ஒப்புதல் இல்லாமல் எப்படி மருத்துவர்கள் கருத்தடை சாதனம் பொருத்தலாம் என்பது பற்றியும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் மருத்துவத்துறையின் செயல்பாட்டை விமர்சித்ததுடன், இந்துப் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதியை சுட்டிக்காட்டினார். மேலும் மருத்துவத்துறை இயக்குநர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்து கருத்தடை சாதனத்தை அகற்ற வேண்டும் என்றும் உயிருக்கு போராடிவரும் அந்த பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் இந்து முன்னணி மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை, குற்றாலநாதன் தலைமையில் இந்து முன்னணியினர் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தனர். இது நடந்து முடிந்து மூன்று நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமையான இன்று மதியம் குற்றாலநாதன் நெல்லை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை இந்து முன்னணி அலுவலகத்தில் இருந்தவரை எந்தவித முகாந்திரமும் இன்றி காவல்துறை கைது செய்துள்ளது. நியாயமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து புகாரைப் பெற்று, அரசு மருத்துவமனை நிர்வாகம் மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, அரசு மருத்துவமனையின் அநியாயத்தை சுட்டிக்காட்டிய குற்றாலநாதனை கைது செய்து அரசு மருத்துவமனையின் தவறான செய்கையை மூடி மறைக்க பார்க்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கருத்து சுதந்திரம் என்பது குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அரசினுடைய தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், விமர்சிப்பவர்கள் மீது வழக்கு தொடுப்பது சிறையில் அடைப்பது என சர்வாதிகாரப் போக்கையே திமுக அரசு கடைபிடிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சியின் அவலங்களை சுட்டிக் காட்டிய ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாய அமைப்பின் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தும் அரசாக செயல்பட்டு வருகிறது.சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் கூட அவர்களைத் தேடிப் பிடித்து பொய்யான வழக்குகளை பதிவு செய்கிறது. திமுக ஆட்சியில் பல கோடி கணக்கான போதைப் பொருள் புழக்கம் தங்கு தடை இன்றி நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வாசலிலேயே கொலை குற்றங்கள் நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை தமிழகத்தையே உலுக்கி வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்களை தமிழக மக்கள் நடத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹிட்லர் ஆட்சியை போல் அரசின் நிர்வாக சீர்கேட்டை சுட்டிக்காட்டும் அனைவரையும் கைது செய்து திமுக அரசு ஜனநாயக ஆட்சி முறையை சீரழித்து வருகிறது. உடனடியாக தமிழக அரசு இந்த மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும். நெல்லை அரசு மருத்துவமனையின் அவலங்களை சுட்டி காட்டிய குற்றாலநாதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நியாயம் தேடித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.