சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

290 0
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட இருக்கிறது.  இது தொடர்பில் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார்  விடுத்துள்ள அறிக்கையில்
உழைப்பாளர்களின் நாளான இன்று நாம் எங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி ஒன்று கூடியிருக்கிறோம். உழைப்புக்கான அங்கீகாரம் முதல்இ கௌரவமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் வரையில் அனைத்து உரிமைகளுக்காகவும் நாங்கள் ஒன்று திரண்டிருக்கிறோம். சமத்துவம்இ சமூக நீதி என்ற வகையில் அனைவரையும் சமனிலையில் வைத்து நோக்கும் பாரம்பரியத்தை உருவாக்குவதற்காக இந்த நாளில் நாம் உறுதியெடுத்துக் கொள்வோம். இந்தக் கூட்டுத்திரட்சியான அரசியற் பலமே எமது மெய்யான விடுதலைக்கும் அனைத்து உரிமைகளுக்கும் வழியை ஏற்படுத்தும்.
உலகம் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் மிக உயர்வாக வளர்ச்சியடைந்திருக்கிறது. வாழ்க்கை வசதிகள் கூட உயர்வடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற உழைப்பாளர்களுடைய வாழ்க்கையும் ஒடுக்கப்பட்டோருடைய உரிமைகளும் உயர்வடையவே இல்லை. இதனால்தான் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்டோரும் தொடர்ச்சியாகத் தங்கள் உரிமைகளுக்காகப்போராடி வருகிறார்கள். அவர்களுடைய உறுதி மிக்க போராட்டங்களே எப்போதும் உலகத்தைச் சரியான திசையில் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
எமது நாடு இன்று கடன்சுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் அந்நிய சக்திகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. அந்நிய சக்திகளின்  நிபந்தனைகளை மீறிஇ சுயமாகச் செயற்படாத ஒரு அரசு மக்களுக்கு விரோதமான அரசாகவே இருக்கும். இலங்கை அரசாங்கம் இன்று மக்களுக்கு அந்நியமான அரசாகவே உள்ளது. இதனால்தான் நாடு முழுவதிலும் மக்களுடைய போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. வேலை கோரிப்போராடும் பட்டதாரிகள் தொடக்கம் ‘சொந்த நிலத்துக்குத் திரும்ப வேண்டும்இ நிலத்தை விடுவியுங்கள்இ படையினரை விலக்குங்கள்’ என்று கேட்போர் வரையிலான மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. மிக இலகுவாகவே தீர்வு காணக்கூடிய தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களையே தீர்க்க முடியாமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சமத்துவம்இ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு மக்களோடு இணைந்து நின்று மக்களுக்கான உரிமைக்கோரிக்கைகளை முன்வைத்து இந்த நாளில் குரல் எழுப்புகிறது.
அந்த வகையில்  பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து 2017 மே நாளை கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் நடத்துகிறது.
1. சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகள் விரைந்து வழங்கப்படவேணும்.
2. பல்லினச் சமூகங்களின் இருப்பையும் அந்தஸ்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேணும்.
3. அந்நிய சக்திகளுக்கு வளங்களைப் பகிர்ந்து கொடுப்பதையும் அந்நிய சக்திகளிடம் பணிந்து நடப்பதையும் அரசாங்கம் தவிர்க்க வேணும்.
4. காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவில் காண வேணும். இதற்கான கால எல்லை வகுக்கப்படுவது அவசியம்.
5. மக்களின் காணிகளில் இருக்கும் படையினர் காலதாமதமில்லாமல் வெளியேற வேணும். அத்துடன் சிவில் வெளியிலிருக்கும் இராணுவப்பிரசன்னம் தவிர்க்கப்படுவது அவசியமாகும்.
6. பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அனைவருக்குமான வேலைவாய்ப்புச் சூழலை உண்டாக்க வேணும்.
7. உழைப்பாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேணும். மேலும் அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேணும்.
8. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேணும். அந்தக் குடும்பங்களின் நல்வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகும்.
9. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேணும்.
10. நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களுடைய முன்னேற்றத்துக்கும் ஏற்ற சுயபொருளாதாரக் கொள்கை வகுத்துச் செயற்படுத்தப்பட வேணும்.
போன்றனவாகும்