யாழ்ப்பாணம் செல்லும் கனேடிய அமைச்சர்

329 0

Canada FMஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபன் டியோன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

அங்கு அவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கனடாவின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் குறித்தும் அவதானம் செலுத்தவுள்ளார்.

இதற்கிடையில் நேற்று அவர் கொழும்பில் வைத்து ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோருடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

மேலும், கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யுத்தத்துக்கு பின்னரான பொறுப்புக்கூறுதல் மற்றும் மறுசீரமைப்பு பொறிமுறைகளில் அர்த்தமுள்ள வெளிநாட்டு பங்களிப்பு அத்தியாவசியமானது என்று வலியுறுத்தினார்.

மேலும், யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட சமூகம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேலேளை, இலங்கையில் தேசிய அரசகரும மொழிகளாக தமிழ்; மற்றும் சிங்கள மொழிகளை நடைமுறைப்படுத்தும் வகையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

கனேடிய வெளிவிவாகர அமைச்சர் ஸ்டீபன் டியோன் மற்றும் தேசிய அரசகரும மொழிகள், மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் ஆகிய இருவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.

இதன்படி கனேடிய அரசாங்கம் மொழிகள் பயன்பாட்டு திட்டத்துக்காக 11.2 மில்லியன் டொலர் ரூபாய்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இந்தநிலையில் மொழிகள் தொடர்பிலான அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையில் துரித கதியில் நடைபெறும் என அமைச்சர் மனோகணேசன் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.