சிவராமின் கொலை சம்பந்தமாக உண்மைகள் அறியப்படுவது அவசியம் – இரா சம்பந்தன்

323 0

சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் கண்டறியப்படவில்லை, குறித்த கொலை சம்பவத்தின் உண்மைகள் அறியப்பட வேண்டியது அவசியம் என  தான்  நினைப்பதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 7.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற  சிரேஷ்ட  ஊடகவியலாளர் அமரர் தராக்கி டி . சிவராமி 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிவராமின் எழுத்தின் கூர்மையை அவரால் எழுதப்பட்ட கட்டுரையால் எல்லோரும் அவதானித்தார்கள்.அதை எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள்.சிவராமின் எழுத்துத்திறமையை பல பெரியார்கள்,புத்திஜீவிகள் புகழ்ந்து பேசியதை நான் காதால் கேட்டிருக்கின்றேன்.

அவருடன் தனிப்பட்ட ரீதியில் பேசும் போதும்,கருத்துக்களை, சிந்தனையை பரிமாறிக் கொள்ளும் போது அவர் சொல்லுகின்ற கருத்துக்களிலிருந்து,அவருடைய சிந்தனையுடைய ஆழம்,அழுத்தம், அதனுடைய சரிவு எல்லாம் புலப்படும்.சிவராம் சாதாரண மனிதரல்ல.அவர் திறமைசாலி ஆவார்.அவர் உயிரோடு இருந்திருந்தால் ஊடகத்துறையில் பெரியதொரு இடத்தைப் பிடித்திருப்பார்.

அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.எங்கள் சமுதாயம் பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றது.பல்வேறு காரணங்களின் நிமித்தம் சமூகத்தில் அரங்கேரிய சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதற்காக,அச்சம்பவங்களின் உண்மைகளை மறைக்காமல் இருப்பதற்காக அவர் பல உண்மைகளை எழுதியதன் மூலம் அவர் கொலை செய்யப்பட்டார்.

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது அக்கொலைச் சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பல முயற்சிகள் நடைபெற்றது.அம்மாணவர்கள் தன்வசம் வைத்திருந்த குண்டுகளின் நிமித்தம் கொலை செய்யப்பட்டார்கள் எனும் சம்பவத்தை மாற்றியமைக்க முனைந்தார்கள்.

அப்பாவி மாணவர்களை சுட்டுக்கொன்ற விடயங்கள் பத்திரிகை மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள்.இதன் நிமித்தம் சுகிர்தராஜன் கொலை செய்யப்பட்டார்.சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் அறியப்படவில்லை.உண்மைகள் அறியப்பட வேண்டியது அவசியமானதாக நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால் பல்வேறு விதமான திறமையான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருந்தபோது அவர்கள் ஏன் கொலை செய்யப்பட்டிருந்தார்…? எதற்காக கொலை செய்தார்கள் …? அந்த கருமங்கள் வெளிவர வேண்டியது சமூகத்தில் உள்ள அத்தியாவசியமான தேவையாகும் என்று நான் கருதுகின்றேன்.

இவ்வாறான நிகழ்வுகள் இனிமேலும் இந்த நாட்டில் இடம்பெறக்கூடாது.ஏனென்றால் இவ்வாறான ஊடகவியலாளர்களின் கொலையில் நடைபெற்ற நிகழ்வுகளின் உண்மைத்தன்மை வெளிக்கொணரப்படவேண்டும் என்று கருதுகின்றேன்.லசந்த விக்கிரமசிங்க கொலை செய்யப்பட்டார்.

எக்னியக்கொட காணாமல் ஆக்கப்பட்டார்.இச்சம்பவங்களின் விசாரணைகள் இன்று நடைபெறுகின்றது.உண்மையான முயற்சிகள் நடைபெறுகின்றது.அவர்களின் பிரேதங்கள் தோண்டியேடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.சில புது முடிவுகளுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் இந்த நாட்டில் யாரும் சுதந்திரமாக சிந்திக்கவில்லை.சுதந்திரமாக செயற்பட முடியாது.சுதந்திரமாக எழுத முடியாத நிலமை இருந்தது.இன்று அந்த நிலமை மாறியிருக்கின்றது.மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம்.சிவராம் நாட்டில் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர் பாரிய பங்களிப்பை செய்திருப்பார்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பல முயற்சிகள் செய்து வருகின்றோம்.பல விடயங்களை பல கோணங்களில் ஆராய்ந்து அவருடைய எழுத்துக்கள் மூலமாக இவ்வூடகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக பாரிய பங்களிப்பை செய்திருப்பார்.அந்தவகையில் சிவராமின் இறப்பு பெரும் இழப்பாக கருதுகின்றேன்.

ஒரு நாட்டின் சமுதாயத்திற்கு ஊடகவியலாளர் பாரிய பங்களிப்பை செய்திருந்தார்கள்.அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது,ஜனநாயகம் பலமாக இருப்பது,ஜனநாயகம் ஆட்சியில் அடிப்படையாக இருப்பது,ஒரு நாட்டின் செயற்படுகின்ற ஊடகவியலாளரின் சுதந்திரத்தில் தங்கியிருக்கின்றது.

அவர்கள் உண்மையை எழுதவேண்டும்.உண்மையான விடயங்களை கூறவேண்டும்.உண்மை வெளிவரவேண்டும்.உண்மை சாதாரண மக்களுக்கு தெரியவேண்டும்.இவ்விதமாக தெரியபட்டால்தான் அந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படலாம்.அது உறுதியாக பாதுகாக்கப்படலாம்.

ஊடகவியலாளர்கள் உங்களுடைய மூத்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவுதினத்தை நாடாத்தி மரியாதை செலுத்தியுள்ளீர்கள். ஊடகவியலாளர்கள் பலமாக இருக்கவேண்டும்.ஊடகப்பணியை துணிவாக ஆற்றவேணும்.எம்மைப் பொருத்தமட்டில் ஊடகவியலாளர்கள் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றோம்.

நீங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு நாங்கள் எவ்விதமாக உதவலாமோ அவ்வாறு உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் பின் நிற்க மாட்டோம்.அதனை உறுதியாக கூறிவைக்கின்றோம்.ஊடகவியலாளர்களை பாராட்டுகின்றேன் என்று எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.