நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்களிற்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு- அனைத்துலகத் தொடர்பகம்,த.வி.பு

85 0

30.12.2024

நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்களிற்கு
நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களையும் ஆழமாக நேசித்த, பல்துறைப் பேராற்றல் கொண்ட தமிழீழத்தின் மூத்த படைப்பாளி நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள், 29.12.2024 அன்று சாவடைந்தாரென்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

தனது படைப்புகள் மூலம் தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வலுச்சேர்த்த நா. யோகேந்திரநாதன் அவர்கள், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவராவார்.

போர்க்காலத்தில், புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் அத்துடன் 1995 வரை ஈழநாதம் நாளிதழின் வன்னிப்பதிப்பின்
ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் – புதுவிதி – வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் இவர் செயற்பட்டிருந்தார். தமிழீழ மக்களின் உரிமைக்கான விடுதலைப்போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியிலும் அளப்பரிய பங்பாற்றிய இவர், போராட்ட வரலாற்றை மையமாகக்கொண்டு – நீந்திக்கடந்தநெருப்பாறு – என்ற நாவலையும் எழுதியிருந்தார்.

இடதுசாரிக்கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய இவர், சமூக அடக்குமுறைகளிற்கு எதிராக அளப்பரிய பங்காற்றியிருந்தார். இதனால் பல்வேறு இன்னல்களிற்கும் இவர் முகம்கொடுத்திருந்தார். சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக – இடிபடும் இரும்புக்கோட்டைகள் – என்ற நாவலையும் படைத்திருந்தார்.

நா. யோகேந்திரநாதன் அவர்கள், படைப்புத்துறை தவிர கூத்துக்கலைஞராக, அரங்க நாடக நடிகராக, வீதி நாடகத்தயாரிப்பாளராக, வானொலி நாடகத்தயாரிப்பாளராகவும்
குரல் வழங்குனராகவும் மேலும் சிறந்த விமர்சகராக, பல்துறை ஆளுமையாளராகவும் மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் உக்கிரமடைந்திருந்த காலத்தில், இவரது படைப்புகளானவை உளவுரனை மேம்படுத்தும் உந்துசக்தியாக விளங்கியிருந்தன. 2009 வரையான போரின் ஓர் சாட்சியமாக வாழ்ந்து, அவற்றை வரலாற்று ஆவணமாக்கிய பெருமை இவரிற்குரியது.

தன்னலன் கருதாது, தனக்கென வாழாது, தமிழீழ தேசத்தையும், மக்களையும் எண்ணி வாழ்ந்த மூத்த படைப்பாளியை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன்,நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்களின் தேசப்பற்றிற்காகவும்
தமிழினத்திற்கு அவர் ஆற்றிய பணிக்காகவும் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்