மாற்றத்தை விரும்பாத மக்களும் தற்போது மாற வேண்டும்

15 0

கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஆனால் எமது அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச அதிகாரிகள் எம்முடன் தர்க்கம் புரிகின்றனர். மாற்றத்தை விரும்பாத மக்களுக்கு தற்போது மாற வேண்டி ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மாறுவதற்கு தயார் இல்லையெனில் அவர்களையும் மாற்றி எமது இந்த பயணத்தை முன்னெடுப்போம். அதற்காக எந்தவொரு சவாலையும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய அருங்கலை பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கைவினைப்பொருடக்ளுக்கான விருது வழங்கல் விழா சனிக்கிழமை (28) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் மக்களுக்காக வீதியில் போராட வேண்டியிருந்தது. அப்போது கடந்த அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக் காட்டினோம். மக்களுக்காக இலஞ்சம், ஊழல், திருட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். இன்று நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளோம். எனினும் தற்போது எமக்கு பல தரப்பினருடன் போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியாளர்கள் பழமையான தீர்மானங்களை எடுத்துள்ளனர். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக மக்களின் உரிமை பாதுகாக்க தவறிய அரச ஊழியர்களிடம் தற்போது போராட்டம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அதிகாரிகள் கடந்த காலங்களில் செய்த விடயங்களையே தற்போது செய்ய முற்படுகின்றனர். இந்த பழமையான கலாசாரத்துக்கு பழகிக் கொண்டவர்களுக்கு அதிலிருந்து விடுபட முடியாமல் உள்ளது.

புதிய அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணை என்ன என்பது தொடர்பில் அவர்களுக்கு புரிதல் இல்லை. அரச அதிகாரிகள் கடந்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்ட விதம் தவறு என்பதனாலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் ஆணை கிடைத்தது. எமக்கு கிடைத்த மக்கள் ஆணையை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்த அரச அதிகாரிகள் கடந்த அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்காக இன்றும் முன் நிற்கிறார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் எடுத்த தீர்மானங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காக அல்ல. அது நாட்டு மக்களின் நன்மை கருதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தேசிய உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே சர்வதேச முதலீடுகளை வழிப்படுத்துவற்கான இறக்குமதியாளர்களுடனும் சார்பிலும் தன்நாட்டு முதலீட்டு நிறுவனங்களில் சார்பிலும் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச அதிகாரிகள் எம்முடன் தர்க்கம் புரிகின்றனர்.

ஆனால் எமக்கு தேசிய உற்பத்தியை பாதுகாப்பதற்காக நிதியமைச்சுடன் முரண்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வரிக்கொள்கையுடன் முரண்பட வேண்டியுள்ளது.அவர்கள் எமது தேசிய உற்பத்தியாளர்களுக்கு எதிராக விதித்துள்ள வரியுடன் தர்க்கம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.வைத்திய உபகரணங்கள் கைத்தொழிற்துறைக்கான உபகரணங்களும் இதில் அடங்குகின்றன.

எனவே மாற்றத்தை விரும்பாத மக்களுக்கு தற்போது மாற வேண்டி ஏற்பட்டுள்ளது.அவர்கள் மாறுவதற்கு தயார் இல்லையெனில் அவர்களையும் மாற்றி இந்த பயணத்தை முன்னெடுப்போம்.அந்த சவால்களை ஏற்றுக் கொள்ள அமைச்சர் என்ற வகையில் நான் தயாராகவே உள்ளேன் என்றார்.