தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் உள்ள கவுன்சிலர்கள் சிலர் மீது தொடர் புகார்கள் அரசுக்கு சென்ற வண்ணம் இருந்தது.பதவியை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுதல், காண்டிராக்டரை மிரட்டுதல், கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் கூடுதல் பணம் கேட்பது, அதிகாரிகளை ஒருமையில் பேசுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.குறிப்பாக விரிவாக்கப்பட்ட மண்டலங்களான சோழிங்கநல்லூர், பெருங்குடி, ஆலந்தூர், மாதவரம் ஆகிய மண்டலங்களில் அதிக புகார்கள் வந்திருந்தது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுங்கள் என்று அவர் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் 4 பேரும் அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பி இருந்தார்கள்.
இந்த நிலையில் இப்போது மேலும் 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் என 4 பேருக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. அதனால் 8 கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து கவுன்சிலர் பதவி தப்புமா? இல்லையா? என்பது தெரிய வரும். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் 52-வது பிரிவு படி கவுன்சிலரை பதவி நீக்கம் செய்தால் அடுத்த மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்படும் வரை அல்லது நீக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு வருடம் வரை மீண்டும் தேர்தலில நிற்க தகுதியற்றவர் ஆகிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.